பக்கம் எண் :

182கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6

32
அண்ணா வருக!

அண்ணா வருக அறிவே வருக
கண்ணே வருக கனிவே வருக
பண்பே வருக பணிவே வருக
அன்பே வருக அறமே வருக
முதல்வா வருக முத்தமிழ்த் தாயின்
புதல்வா வருக புண்ணியா வருக
தாயெனத் தமிழகம் தாங்கும் நினக்கு
நோயென ஒருசொல் நுவன்றனர்; அச்சொல்
தணியாத் துயரைத் தந்திட நொந்தேன்
இனியாய் நினக்கோ இந்நிலை நேர்ந்ததென்
றேங்கி ஏங்கி இடர்தனில் வீழ்ந்தேன்;
தாங்கிய துயரம் சாற்றுதற் கரிதே;
நாட்டின் நிலையும் வீட்டின் நிலையும்
வாட்டிட நாளும் வதங்கிடும் என்மனம்
நாட்டின் தலைவன் நலிவுற் றானெனக்
கேட்டுத் துடித்துக் கிடந்தது துவண்டது;
பைந்தமிழ் பாடிப் பழகுமென் நாவும்
வெந்துயர் பொறாஅது வேதனைப் படலால்
பாடல் மறந்து பாழ்த்துக் கிடந்தது
வாடல் தவிர்த்திட வந்தனை தலைவா!
வருகஎம் தலைவா வாழிய நெடுநாள்
தருகசொல் லமிழ்தம் தலைவா வாழிய!