பக்கம் எண் :

வள்ளுவர் கோட்டம்39

ஓதுகின்ற சீர்திருத்தப் பெரியா ராக
       ஒப்பில்லா நம்பெரியோன் காட்சி தந்தான்;
ஏதமிலா புலமைபெறும் ஆசான் காட்டும்
       இனியவழி நாட்டுக்கு நலமே கூட்டும்.

கடவுளெனும் ஒரு பொருட்டுக் கட்டி விட்ட
       கதைகளுக்கோர் அளவுண்டோ? அவற்றால் மாந்தர்
மடமைஎனும் பேரிருளில் வீழ்ந்து மூழ்கி
       வழிவகைகள் காணாமல் ஏங்கித் தாழ்ந்தார்;
கடல்பொருவும் வாலறிவன் சிந்தித் தாய்ந்து
       கடவுளெனும் செம்பொருட்கு வகுத்து ரைத்த
திடமுடைய குறிக்கோளைப் பூண்டு நிற்பின்
       தீயநெறி எவ்வண்ணந் தலையெ டுக்கும்?

நல்லரசை நாட்டுதற்கு வழிகள் சொல்லும்
       நாவலர்க்குத் தலைவனவன், எங்கள் அண்ணல்
சொல்லுகின்ற அரசியலின் நெறியிற் சென்றால்
       துயரேது? கொடுங்கோலர் பிழைப்பும் ஏது?
சொல்லரசன் குறிக்கோள்கள் சட்டம் ஆனால்
       *தொழும்புசெயும் நிலையேது? வறுமை ஏது?
நல்லறிஞன் குறளுருவன் தொண்டை நாடன்
       நாகரிக அரசியலின் தந்தை யாவன்.

இருளகற்றுங் காலையிளங் கதிரோன் என்ன
       இருநிலத்து மாந்தருக்கு மனத்து நோயை
மருளச்செய் தோட்டுகிற புலவன் றன்னை
       மருத்துவத்துக் கலைஞரென மதித்து நிற்போம்;
பொருளெடுத்து நிறைத்திருக்கும் அவன்றன் பாட்டில்
       புகன்றிடுநல் வழிநிற்போர் பிணிய றுப்பர்;


*தொழும்பு - அடிமை