பக்கம் எண் :

வீரகாவியம்371

இயல் - 58

போரெடுத்து வந்தவனைப் புரிந்து கொண்ட
புன்மைமனப் பெருங்கனகன் துணைபோல் நின்றான்.

அளப்பரிய வலியுடையான் தன்னோ டுற்ற
      அடன்மிகுந்த வீரரொடும் புனலா றென்னும்
வளப்புகழ்சேர் நதிக்கரையின் ஒருபால் தங்க
      வந்துள்ளான் எனுஞ்செய்தி நாவ லத்தான்
களத்தவையிற் போய்ப்புகுத, வேந்தன் சூழ்ந்து
      கருதலரைப் புறங்காண உருத்தெ ழுந்த
குழக்களிற்றின் அனையானைக் கூற்ற மன்ன
      கோளரியைப் புகழ்ந்தவற்குத் துணைகள் செய்தான்.272

முறுவலனாம் கோளரிதான் மொய்ம்பு மிக்க
      மூவகத்து வேழனுக்கு மகனே என்று
மறைதெரியும் ஒற்றதனால் உணர்ந்து கொண்ட
      மாமன்னன் தனித்திருந்து சூழ்ச்சி செய்தான்;
‘உறுபகையால் எழுமிவனுக் குதவி செய்யின்
      ஒள்வேலான் வேழனையே கொல்லல் கூடும்;
பிறகிவனை வஞ்சனையால் நஞ்சு தந்து
      பெருந்துயிலில் கிடத்துவம்நாம்’ என்றே கொண்டான்.273

கொண்டதொரு வஞ்சனையால் ஐயி ரண்டைக்
      கூடிவரும் ஆயிரமாம் வீரர் சூழ்ந்து
மண்டுபெரும் படையொன்றைத் திரட்டித் தந்து
      மாவலியன் தடவலியன் என்பார்க் கூவித்
‘தண்டுகொண்டு கோளரிக்குத் துணையாய் நின்று
      சமர்புரி’கென் றிருவர்க்கும் ஆணை யிட்டான்;
தொண்டுபுரி படைத்தலைவ ரவரை நோக்கித்
      துணைபுரியச் செல்லுமவர்க் கொன்று சொல்வான்.274


குழக்களிறு - இளையயானை, மொய்ம்பு - வலிமை, மறை - இரகசியம். ஒற்று - உளவறிவார். தண்டு - சேனை,