இயல் - 92 எழில்முகத்துப் பாலகன்நீ போர்தொ டுக்க ஏன்வந்தாய்? பிழைத்துப்போ! என்றான் வேழன். ‘பால்வழியும் எழில்முகத்துப் பால! இங்குப் பற்றியுனைப் பொருதுகொல மனமே யில்லை; ஏல்வலியை நீயெனினும் சிறுவன் அன்றோ! யான்முதிர்ந்த பெருமறவன்; குருதி வெள்ளம் வேல்வழியிற் பாய்ந்தோடக் களங்கள் கண்டேன் வெண்பூதன் மடிந்தொழியப் பொருது வென்றேன் சால்புடைய மறவர்குல மகனே! ஈன்ற தாய்க்குரிய மகனாகப் பிழைத்துப் போபோ!395 நான்பெற்ற மகன்போல உனைநி னைத்தே நவில்கின்றேன் நயவுரைகள்; கேளென் சொல்லை; ஏன்பெற்றாய் இந்நிலையை? நாவ லத்தான் ஏவலுக்கோர் ஆளாகி மடிதல் வேண்டா! வான்பெற்ற பிறகளங்கள் புக்கு நின்றன் வாள்வலிமை காட்டியங்கு வென்றி கொள்க! தேன்பெற்ற மொழியுனக்கு மனமி ரங்கிச் செப்புகின்றேன் சென்றுபிழை! செல்வா’ என்றான்.396
ஏல் - (போருக்கு) ஏற்ற, வெண்பூதன் - மாவேழனால் கொல்லப்பட்ட பெருவீரன். |