104 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8 |
தெங்கின்காய் உடைக்குமொலி கேட்டு விட்டால் திரண்டோடி வந்தன்னை சீலை பற்றி இங்கந்நீர் எனக்கெனக்கென் றடம்பி டிக்கும் இளஞ்சிறுவ ரிடைநிற்பாள் ஒவ்வோர் வாய்க்கும் பங்காக்கி ஊற்றுதல்போல் தம்பால் வந்து பணிபவர்க்குத் திருநீறு வழங்கி வாழ்த்திச் சங்கத்து முத்தமிழ்க்கும் சங்க ரற்கும் சமமாக உளமளித்த அடிகள் நின்றார். 4 மேன்மாடத் தினிதிருந்த அடிகள் தம்பால் வீறுபெறு தமிழ்ப்புலவர் வருகை கூற மான்தாவித் துள்ளுதல்போல் உவகை கூர்ந்து மாமுனிவர் எழுந்தோடி இறங்கி வந்தார்; “கான்மாறி யிருப்பதனாற் படிகள் ஏறிக் கண்டுவர இயலவில்லை; அடிகள் தம்மை நான்பாவி வரவழைத்தேன்; பொறுத்துக் கொள்க” நாநடுங்கக் கண்பனிப்ப மனம்தி றந்தார். 5 செந்தமிழ்மா மணிமொழிந்த பணிவு கண்டு சிவசிவவென் றடிகளவர் தொழுதி ருந்தார்; உந்திஎழும் ஆர்வத்தாற் பொங்கி நின்ற உணர்ச்சியினால் ஒருவர்முகம் ஒருவர் கண்டு கொந்தவிழ்ந்து விரிமலர்போல் முறுவ லித்தார்; கொழிதமிழும் சிவநெறியும் கூடிற் றங்கே; சிந்தைமகிழ் தொண்டுபுரி நாவின் வேந்தர் சீகாழிச் சம்பந்தர் சந்திப் பாகும். 6 சங்கரனார் உமையவளைக் குமரன் என்னும் தம்மகனை உடனழைத்து மதுரை மூதூர்ப் பொங்குதமிழ்ச் சுவைமாந்தும் வேட்கை பூண்டு பூதலத்து மாந்தரென இறங்கி வந்தார்; எங்கள்தமிழ்க் குருபரனார் இந்த வண்ணம் இனியதமிழ்ப் பெருமையினை இயம்பு கின்றார்; இங்கரனார் அடிபரவும் அடிகள் தாமும் இறங்கிவரல் முறைதானே தமிழைக் காண. 7 |