இளைஞன் | : | தாயகங் காப்பேன் தளரேன் உறுதி ஏயுமென் னுயிரும் ஈகம் புரிவேன்; செருக்களஞ் செல்லும் உருக்கொளும் இவர்யார்? அருச்சுனன் மைந்தன் அபிமன் இவரோ? |
முதியவர் | : | இல்லை அபிமன் இலனவன்; இளையோய் நல்லைநீ; நினது நாட்டிற் குரியவர் அறிவிலை நின்னின் அயலவர் தம்மைத் தெரிந்துளை நன்குன் திருநா டிதனுள் அவன்சிலை காணல் அறியாப் பேதைமை; |
இளைஞன் | : | எவரெவர் சிலையோ ஈங்குள அவைதாம் பேதைமைச் செயலோ? . . . . . . . . |
முதியவர் | : | . . . . . . . . பேதைமை யொன்றோ? தீதும் நன்றுந் தெரியா தொழுகும் அடிமை என்பதன் அறிகுறி யாகும்; அடிபட அடிபட அரத்தம் சிந்திக் கொடிவிடா துயிர்விடுங் கொள்கை மறவர், அடிமையும் மிடிமையும் அயலவர் ஆட்சியும் பொடிபட உரிமை பூண்கலஞ் செலுத்திச் செக்குடன் உழன்று சிறையுள் வாழ்ந்தோர் |
| | இத்தகு செயலோர் எத்தனை மாந்தர்; அனைத்தும் மறந்தோம் அயலோர்த் தொழுதோம்; |
இளைஞன் | : | நன்றி பெரியீர் நாட்டுணர் வூட்டி இன்று தமிழனென் றென்னை யுணர்த்தினீர் அந்தநன் மறவன் யாரென விளம்புக; |
முதியவர் | : | கன்னற் சாறெனக் கவிதை படைப்பவன் கருதலர்க் காணிற் கடும்பகை உடைப்பவன் தனித்துணான் வெறுப்புறான் தகாப்பழிக் கஞ்சுவான் புகழ்வரும் எனிலோ போக்குவன் உயிரும் இளைஞன் பெருமையன் இளம்பெரு வழுதி கடலுள் மாய்ந்தான் காளை யிவனே; |