பக்கம் எண் :

ஊன்றுகோல்19

அமைந்திருந்தது. மேடையில் அவர் அமர்ந்திருந்து பேசும்போது, பரியவுடலும் பொன்னிற மேனியும் புன்னகை முகமுமாய் யாரையும் வயப்படுத்தும் தோற்றம் கண்ணையும் கருத்தையும் கவரும்.அதை ஓவியம் தீட்டுகிறார் பாவரசர்:

‘சிரிப்பிருக்கும் அவர்வாயில்;பேசும்காலை
       சிந்தனையின் தெளிவிருக்கும் அவர்முகத்தில்;
விரித்திருக்கும் ஒளியிருக்கும் விழியிரண்டில்;
       விரிநெற்றி பொலிவுபெற நீறிருக்கும்;
பருத்திருக்கும் கழியினைக்கை பிடித்திருக்கும்;
       பளபளக்கும் அக்கழியில் பூணிருக்கும்;
விரித்திருக்கும் நீள்விரிப்பில் அமர்ந்திருப்போர்
       விழிகளுக்குள் வியப்பிருக்கும் களிப்பிருக்கும்.’

‘பொன்விசிறி மடிப்பொன்று தோளின்மீது
       புரண்டிருக்கும் வடமொழியும் பயின்றா ரேனும்
மின்முகிலிற் பொழியுங்கால் அயன்மொழிச்சொல்
       மேவாத தமிழிருக்கும்; பிறர்கருத்தை
முன்னியல்பின் எள்ளலொடு மறுக்குங்காலை
       முனைமழுங்காக் கூர்ப்பிருக்கும் இனிதமர்ந்து
நன்மணியார் நிற்காது பேசுகின்ற
       நாவன்மை கண்டுலகம் போற்றி நிற்கும்’. (8:6,7)

வெறும் தோற்றத்தைவிடப் பேசிக்கொண்டிருக்கும் இயங்கு நிலையில் சித்திரித் திருப்பது உயிரோவியமாகிறது. இடையிடையே மறுப்புரை, எள்ளல், நகையாடல், கைதட்டு இருப்பதனால் மின்னலுடன் மழை பொழிவதை உவமை கூறுகிறார். ‘நிற்காது பேசுகின்ற’ என்பது, காலூன்றி நின்று பேசுதற்கியலாத நிலையில் எப்போதும் அமர்ந்து பேசுதலை மட்டுமின்றி, இடையே தட்டுத்தடு மாறி நிற்காமல் சரமாரியாகப் பேசுதலையும் குறிக்கிறது. அவருடைய கண்ணின் ஒளியும் கருத்தின் ஒளியும் காண்போரையும் ஊடுருவி நிற்கும் எனக்காட்டுவது, பொலிவிற்குப் பொலி வூட்டும் சித்திரத் திறனாகும். பற்பல புதிய உவமைகள் இடம்பெற்று ஆசிரியரின் அனுபவத்தையும் இலக்கியக் கலைத்திறனையும் விளக்குகின்றன.

காப்பியக் கதையே நம்பவியலாப் புராணத்தன்மை பெற்ற தாயிருக்குமெனல் அதன் பழையநிலை. எனினும் அழுத்தம்பெறப் புனைதலில், முடியரசர் பாவியத்திலும் அக்கூறு தலைநீட்டுகிறது.