தலையளி சொரிந்து நின்றாள் தமிழன்னை அவனை நோக்கி’ (2:19) ஒரு காப்பியப் புலவன் கதைநிகழ்ச்சிகளையெல்லாம் கூறுவ தோடுமட்டும் அமையானாய், தன் கருத்துகள், சிந்தனைகளை யெல்லாம் பெய்துவைக்கும் பேழையாகவும் காப்பியத்தைப் பயன்படுத்திக் கொள்வான் என்பர்.அதற்கொப்ப இவ் வாசிரியர் பேச்சாளன் இலக்கணம், மொழிபெயர்ப்பின் இலக்கணம், நூலா சிரியன் இலக்கணம், கவிஞன் இலக்கணம், ஈகை இலக்கணம் என்றினைய பல வரன்முறை விதிகள் போன்ற சிந்தனைகளை ஆங்காங்கு பெய்து வைத்துள்ளார். ஈகை என்பது எது? ‘சொலக்கேட்டு விழியிமைகள் இமைப்பதிலை தூண்டுவதால் ஈகைமனம் பிறப்ப தில்லை மலைக்காட்டில் திரிமயில்கள் தோகை தனை வற்புறுத்திக் கூறுவதால் விரிப்ப தில்லை மலைக்கோட்டு மாமுகிலும் பிறர்சொல்லை மதித்தெழுந்து மழைநீரைப் பொழிவ தில்லை தலைக்கொள்ளும் இயல்புணர்வால் மனங்குளிர்ந்து தானுவந்து வழங்குவதே ஈகை யாகும் ’ பண்டிதமணியாரின் நட்புச் சிறப்பைப் பாடுமுகத்தான் குன்றக்குடி அடிகளின் சிறப்பைக் குன்றின் மீதிட்ட விளக்காகப் புனைந்துள்ளார். மறைமலையடிகள், நாட்டாரையா போன்ற பலரை விளக்கும் திறன், கவிஞரின் உணர்வு, ஈடுபாடு ஆகிய வற்றைப் புலப்படுத்துகிறது. முருக பத்தர் ஒருவர் பண்டிதமணியின் சமயப்பற்றை நினைத்து, அவரை ஏமாற்றி ஐயாயிரம் ரூபாய் பெறலாம் என எண்ணி வந்து நாடகமாடியபோது,தாமும் அதனையே பின்பற்றி அவரைச் சொல்லாமல் ஓடவைத்த செய்தி நகைச்சுவை மிளிர்வதாகும்.’ மயக்குறாக் காதை’ படிப்படியாக, நகைச்சுவையை வளர்க்கும் பான்மை படித்து இன்புறத்தக்கது. கையில் காசில்லாதபோது ‘பணமுடை’என்பது ஒரு வழக்காறு. அதனைப் ‘பணம் உடையார்’ என்றும் ‘பண முடையார் ’ என்றும் பிரித்து, இரட்டுற மொழிதலாக நயந்தோன்றக் கூறலாம். பண்டிதமணி குடும்பத்தார் பண முடையார் என்று மகட்கொடை நேர்ந்தோர் சற்றே மறுதலித்தபோது, மேலைச்சிவபுரி வ. பழ. சா. பழநியப்பர் பணம் உடையாரா |