பக்கம் எண் :

ஊன்றுகோல்71

கல்லானும் செம்பானும் வடித்து வைத்த
       கடவுளெனும் வடிவங்கள் கண்டு வந்தே
எல்லாரும் நிற்பதுபோல் நில்லா ராகி
       இணைந்துமனம் உவந்துருகிக் கசிந்து நின்று
சொல்லாலும், பொருளாலும், துய்க்கும் இன்பப்
       பயனாலும் சொலற்கரிய பெருமைத் தாய
நல்லோர்தம் அருண்மொழிகள் நிறைந்த நூலுள்
       நாயகனைக் கண்டுவப்பார் அருளின் செல்வர் 8

கற்கோவில் வலம்வந்து சிலையில் நிற்கும்
       கடவுளரை வணங்கலினும் அடியார் செய்த
சொற்கோவில் வலம்வந்து, தடையே யின்றித்
       துணிந்தெழுந்து கருவறைக்குட் புகுந்து சென்று
முற்காணுஞ் செம்பொருளைக் கண்டு கண்டு
       மூழ்குவதில் வணங்குவதில் இன்பங் கண்டார்;
தெற்கோதும் திருமுறையுட் பேறு பெற்ற
       திருவுடையார் அருளுடையார் இவரே யாவர் 9

கடையிரவு கழிந்தபினர் விழிம லர்ந்து
       கனிவுதரும் வாசகத்தை விரித்து நெஞ்சில்
இடையறவு படாவகையில் ஓதி ஓதி
       இறைவனடி நினைந்துருகி மகிழ்ந்து பின்னர்
மடலெழுதும் மெய்யன்பர் மகிழு மாறு
       மறவாமல் அவ்வவர்க்கும் ஏற்ற பாங்கில்
விடையெழுதும் இயல்பதனைக் கடமை யாக
       விடையுடையன் அடிபரவும் தொழும்பர் கொண்டார் 10

ஒருபாதி உமையவட்குத் தனது மெய்யில்
       இடமளித்த ஒருவனடி உளத்திற் கொண்டார்,
ஒருபாதி தமதுளத்திற் செந்த மிழ்க்கும்
       ஒருபாதி சிவநெறிக்கும் இடம ளித்தார்,
இருவேறு மொழியுணர்ந்தும் உளத்திற் றோய்ந்த
       இனியதமிழ் மொழியாலே தொழுது வந்தார்;
திருவாத வூரர்மொழி மூவர் ஓதும்
       திருமொழிகள் இவர்நெஞ்கை யுருக்கி நிற்கும் 11