மன நிறைவுடன் செய்திருக்கிறேன் என்று கூறி, மேலும் எனக்கு வெள்ளிவிழா நடத்தித் சிறப்பித்த தமிழ் அறிஞர் கழகத்துக்கும் நன்றிகூறி அமர்கின்றேன்; வணக்கம். 23. நாடகக் காட்சி அமைத்தல் நீங்கள் பல நாடகங்களைப் பார்த்திருப்பீர்கள். அந்நாடகங் களின் காட்சிகளை நாடகவாசிரியர்கள் எவ்வாறு அமைத்துள்ள ரென உன்னிப்பார்த்தல் வேண்டும். நாடகக் காட்சிகளை அமைப்ப தற்குமுன் கதையை நன்கு மனத்தில் கொண்டு, எவ்வெந் நாடக மாந்தரை அக்காட்சிக்குக் கொணர்தல் வேண்டும். எவ்வெவ்வாறு உரையாடல்களை அமைத்தல் வேண்டு மென எண்ணிப் பிறகு எழுதுதல் வேண்டும். நாடகக் காட்சிகள் நன்கு அமைந்தால்தான் நாடகம் சிறப்புறும். ஒவ்வொரு காட்சியிலும் காலம், இடம், அக்காட்சிக் குரிய மாந்தர்கள் பற்றிய விளக்கம் தெளிவாகவிருத்தல் வேண்டும். காட்டாக: பின்வரும் நாடகக் காட்சிகளைப் படித்து உணர்ந்து மனத்திற்கொண்டு, நாடகக் காட்சினளை அமைத்துப் பழகுக. மானங் காத்த மன்னன் காட்சி-1 இடம்: சேரநாடு; கருவூரில் அரண்மனைக் கொலு மன்றம். காலம்: காலை நடர்: சேரமான் கணைக்கால் இரும்பொறை, அமைச்சர், பொய்கையார், மற்றும் பல புலவர்கள். சேரமான்: புலவர் பெருமக்களே ! தங்கள் கூட்டுறவில் நான் அகங்களிக்கிறேன். எனக்கு இதனிலும் சிறந்த பேறு உண்டோ? அந்துவனார்: மன்னா! வாழ்க நின் கொற்றம்! நின் வாய்மை, தூய்மை, நேர்மை முதலிய நற்பண்புகளால் நாடே நல்லொழுக்கத்திற் சிறந்திட, மக்கள் மனங்களித்து வாழ்கின்றனர். நின் பெருமையைப் பாடும் நாங்களன்றோ பேறு பெற்றவராவோம்! சேரமான்: நான் கண்ணென மதித்துப் போற்றும் என் ஆசிரியப் பெருந்தகையின் இன்னருள் ஒளியால் நன்னெறிச் செல்லும் நல்லறிவு பெற்றேன். அவ்லொழுக்கப் பாதையறிந்து நடப்பதில் வியப்பில்லை யன்றோ! |