206 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9 |
சர்வ சமயக் கீர்த்தனைகள் இவருடைய பாடல்கள் இலக்கண வரம்பு கடவாதன. இவற்றில் சொல்லழகு மிளிரும்; ஓசையின்பம் உயர்ந்திருக்கும்; எதுகை மோனை எக்காளமிடும். எளிய சொற்கள், உயரிய கருத்துகள், நினைந்துநினைந்து மகிழும் உவமைகள், நகைச்சுவை, பத்திச்சுவை முதலியவை இவர் பாடல்களிலே உண்டு, கருநாடக சங்கீத வழிகளில் எவ்வளவு இராகங்கள் உண்டோ அவ்வளவுக்கும் இவர் பாடல்கள் இயற்றியிருக்கின்றார். வேதநாயகம் பிள்ளை பாடிய பாடல்கள், ‘சர்வ சமய சமரசக் கீர்த்தனைகள்’ என்னும் பெயர்தாங்கி, நூல் வடிவில் வெளிவந்தன. இவர் பாடல்களில் இறைவனைக் குறிக்குஞ் சொற்களெல்லாம் பொதுவாகவே அமைந்திருக்கும்; உள்ளத்தைத் திருத்தும் உயர்ந்த கருத்துகள் மிளிரும்; நகைச்சுவை பல விடங்களிலே தோன்றும். இவ்வாறு தமிழிசைக்குப் புத்துயிரும் மறுமலர்ச்சியும் உண்டாக்கும் குறிக்கோளுடன் பாடிப்பாடிப் பறந்து வந்த இசைக் குயில் வேதநாயகர் கி.பி. 1889ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21ஆம் நாள் இவ்வுலகைவிட்டே மறைந்தார். இசைக்குயில் மறைந்து விட்டாலும் அக் குயிலின் குரல் ஒலித்துக் கொண்டேயிருக்கின்றது. |