220 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9 |
கூட்டம் நடைபெற்றது. பாராட்டென்றால் கவிமணி ஒப்புக் கொள்வாரா? அதனால் ‘ரசிகமணி’ டி.கே.சிதம்பரநாதரின் துணையால் இவரை அழைத்து வந்தனர். செட்டிநாட்டரசர் அண்ணாமலை வள்ளல் கவிமணியை வரவேற்று, மிகச் சிறந்த சொற்பொழி வாற்றிப் பொன்னாடை போர்த்திச் சிறப்புச் செய்தார். பழங்கால மன்னர்கள் தம் அரண்மனையில் புலவர் களுக்குச் சிறப்புச் செய்த காட்சிபோல் அந்தக் காட்சி விளங்கியது. செட்டி நாட்டரசர் பெருமிதத் தோற்றத்துடன் மேடையில் ஏறி நின்று, பொன்னாடையை எடுத்து விரித்து, மகிழ்ச்சி பொங்க, அழகாக அமைதியாகப் புலவரை மதிக்கும் பொறுப்போடு கவிமணிக்குப் போர்த்திய காட்சியும், கண்ணீர் மல்கக் கைகுவித்துப் பணிவோடு தலைவணங்கி நின்று, கவிமணி அதனை ஏற்றுக் கொண்ட காட்சியும் கண்டு களித்தவர்களுடைய நெஞ்சங் களிலும் கண்களிலும் இன்றும் நின்று நிலவுகின்றன. பாராட் டென்றால் அஃதன்றோ பாராட்டு! கவிமணி பாடிய ஒரே ஒரு வெண்பாவைப்பற்றி ‘ரசிகமணி’ நெடுநேரம் பேசினார்; பொருள் கூறாமல், திரும்பத்திரும்ப அதனைப் பாடி இன்பத்தில் திளைத்தார்; கேட்டோரையும் திளைக்க வைத்தார். தமிழறிஞர்கள் பாராட்டிப் பேசியபோது, கவிமணி நாணித் தலைகுனிந்தே வீற்றிருந்தார். கவிமணி தம் பாடலைக் குழந்தைகள் பாடி ஆடி நடித்தபோது அளவு கடந்த மகிழ்ச்சியடைந்தார்; சிறப்புற நடித்த சிறுவன் ஒருவனை ஆரத்தழுவிக்கொண்டார். கவிமணியின் நன்றியுரை பொன்னாடை போர்த்தப்பெற்ற கவிமணி எழுந்து நின்று, கண்கலங்க, மெய்ந்நடுங்க, சொல் தடுமாற, உணர்ச்சி வயமாகி, அன்பு பொங்கத் தமக்கே உரிய அடக்க உணர்வுடன் சில மொழிந் தார். அம் மொழிகளில்தான் எவ்வளவு அடக்கம்! எவ்வளவு பண்பு! எவ்வளவு உணர்ச்சி! ‘யானைக்குப் போர்த்த வேண்டிய பொன்னாடையை ஆட்டுக் குட்டிக்குப் போர்த்தி விட்டீர்கள். நான் இத்தகைய பாராட்டுகளுக்குத் தகுதியுடை யவனா? எனினும் என் தமிழ்த்தாய்க்குச் செய்யப்பபெற்ற சிறப்புகளாகவே இதனைக் கருதுகிறேன்’ என்று பண்பும் பணிவுந்தோன்ற மொழிந்தார். |