பக்கம் எண் :

பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம்107

போலக் கருதி விட்டார். அன்பு வடிவமாக இருந்த அன்னை, மருமகளிடம் மாறி நடக்கத் தொடங்கி விட்டார்.

மனம் மாறினும் என்னைத்தான் குறை கூறுவார்களே தவிர மருமகளை நல்லவள் என்றுதான் வருவோரிடம் கூறுவார்கள். அன்னையார்க்கு வீம்பும் பிடிவாதமும் மிகுதி. அதனால் இறுதி வரை என்னுடன் பகையாகவேயிருந்தார். திருமணச் சீலை; நகைகள்அனைத்தையும் வாங்கி வைத்துக் கொண்டார். வீட்டிலிருந்த பொருள்களையெல்லாம் விற்கத் தொடங்கி விட்டார். எனக்கு ஒன்றும் வைக்கக் கூடாதென்று அப்படி நடந்து கொண்டார்.

எனக்கு மீண்டும் மணமுடிக்க முயன்றது, மனம் மாறியது, பொருள்களை விற்றது எதுவுமே என் மனைவியின் மனத்தைத் தாக்கவில்லை. அவர் ஒரு குழந்தையுள்ளம் கொண்டவர். ‘உலகமே’ தெரியாதவர். எனக்கு மட்டும் ‘உலகம்’ தெரிந்து விட்டது என்று எண்ணிவிட வேண்டாம். நானும் அப்படித் தான் எனினும் ஐந்து மதிப்பெண்ணாவது எனக்கு மிகுதியாகக் கிடைக்கும். அகவை, கல்வியைத் தவிர பிற அனைத்தும் ஒத்தவையே.

நான் சில வேளைகளில், அறியாமையால் துணைவியாரைச் சினந்து பேசினும் கடிந்து கூறினும் சிறிதும் சினவார், வருத்தார். அத்தகைய பொறுமை வடிவமானவர். பின்னர் நானே என்னை நொந்து கொள்ளுவேன். பகுத்தறிவுவாதியென்று சொல்லிக் கொண்டு இப்படிப் பேசி விட்டோமே! நிலையிற் கீழிறங்கி விட்டோமே! என்று கண்கலங்குவதுமுண்டு. எவ்வளவு சுடு மொழி கூறினும் அடுத்த நொடியே, ‘என்னங்க’ என்று பேச வந்து விடுவார். எங்கள் வாழ்க்கையில், நாங்கள் ஒரு பொழுது கூடப் புலந்து பேசாதிருந்த தில்லை. அன்பால் பிணைக்கப் பட்ட மையால் எங்கள் வாழ்க்கையை இன்ப மயமாக்கிக் கொண்டோம்.

செல்வநிலையிற் பின் தங்கியவன் நான். அதனால் பற்றாக் குறை ஏற்படும் பொழுது, என் துணைவியின் கை, காது, கழுத்து, மூக்கில் இருந்த அணிகலன்களையெல்லாம் விற்று விடுவேன். ஏன்! தாலியைக் கூட விற்றிருக்கிறேன். எதையும் முகங் கோணாது தந்து விடுவார். இந்நிலையிலும் எங்கள் அன்பிற் குறைபாடே நேர்ந்ததில்லை. இந்நன்றியுணர்வை மனத்திற் கொண்டு தான், கம்பர் விழாவில் ஆறு என்ற தலைப்பிற் பாடும் போது