பக்கம் எண் :

பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம்125

5
வலைப்படா மயில்

வீண் பழிகள்

என்பாற் பயின்ற திராவிடர் கழகத்தைச் சேர்ந்த மாணவரும் பேராயக் கட்சியைச் சேர்ந்த பெற்றோர் சிலரும் கூடி, என் மேற் சில குற்றங்களைப் புனைந்து, அப்பொழுதிருந்த முதலமைச்சர் பக்தவத்சலனாருக்கு எழுதிவிடுக்க, அதனை அவர், மண்டலக் கல்வி அலுவலருக்குத் திருப்பி விடுக்க, அவர், எங்கள் மாவட்டக் கல்வி அலுவலருக்குத் திருப்பி விட்டார். அவர், 31.3.67 நாளிட்ட கமுக்க அறிக்கை (இரகசிய அறிக்கை) யொன்றை, எங்கள் பள்ளித் தாளாளருக்கு உய்த்தார். அவ்வறிக் கையில் என்மேற் சுமத்தப்பட்ட குற்றங்கள் வருமாறு :

1. தமிழாசிரியர் திரு. முடியரசன் 26, 27.11.66 தேதிகளில் காரைக்குடியில் நடைபெற்ற இந்தி யெதிர்ப்பு மாநாட்டை நடத்துவதற்கு உதவி செய்தமை, அம்மாநாட்டில் கலந்து கொண்டமை.

2. வகுப்புகளில் இவ்வாசிரியர் வகுப்பு நேரங்களில் அரசியலைப் பற்றி மாணவர்களுக்குக் கூறுதல்.

3. வகுப்பு நேரத்தில் மாணவர்களைக் கொண்டே தான் எழுதும் கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதச் சொல்லி அவற்றை அஞ்சலில் அனுப்ப ஏற்பாடு செய்தல்.

4. பாடங்களைச் சரிவரக் கற்பிக்காமல் பிறகாரியங்களில் முழுக்கவனத்தையும் முயற்சியையும் செலுத்துதல்

5. சில அரசியல் கட்சிகளைப் பற்றி இழிவாக வகுப்பறையில் பேசுவது.