138 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 10 |
6 மணிக்குயில் பறித்து நடுதல் நான் ஓய்வு பெற்ற பின், சிலர் என்னிடம் வந்து, ‘உங்களுக்கு மணி விழா நடத்தி எங்களால் முடிந்த பணமும் வழங்க எண்ணுகிறோம்’ என்றனர். வந்தவர்கள், என்பாற் பயின்று, எங்கள் பள்ளியிலேயே ஆசிரியராக இருப்போர். அதை, நான் விரும்ப வில்லை. உங்களன் புக்கு நன்றி, வெளியில் பணம் தண்டுவீர்கள், அஃது எனக்கென்னவோ இழுக்கு என எண்ணு கிறேன் என்னை விட்டு விடுங்கள் என்றேன். ‘இல்லை ஐயா, நாங்களே எங்களால் முடிந்ததைப் போட்டு, விழா நடத்த விரும்புகிறோம்’ எங்களைத் தடுக்க வேண்டாம் இஃது எங்கள் விருப்பம். உங்களிடம் ஒப்புதல் கேட்கவில்லை. வரவேண்டும் என்று அழைக்கிறோம்.’ என்றனர். சரி, உங்கள் அன்புக்குக் கட்டுப்படுகிறேன் - என்று சொல்லி விட்டேன். ஒரு ஐந்நூறாவது சேர்த்துத் தருவார்கள்; ஆசிரியர்களால் அவ்வளவு தானே இயலும்? என்று எண்ணிக் கொண்டேன். என் நண்பர், பாவலர் மணி-பழநியைச் செயலாளராகக் கொண்டு, ஆசிரியர் குழு இயங்கியது. என்ன நடை பெறுகிறது? எப்படிச் செய்கிறார்கள்? என்பதெல்லாம் எனக்குச் சொல்லவே இல்லை. ஒரு நாள் பழநி என்னிடம் வந்தார். ஓர் அச்சிட்ட அறிக்கையை என்னிடம் தந்தார். |