பக்கம் எண் :

பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம்163

அடுத்த ஆண்டு முதல், விருது தருவதுடன் பொற்பதக்கமும் அளித்து வந்தார். சில ஆண்டுகட்குப் பின்னர் நடந்த விழாவில், அடிகளார் என்னையும் அழைத்து அச்சிறப்பினைச் செய்தார். விழாத்தலைவர் கலைஞர்தான் பொன்னடை போர்த்துப் பொற் பதக்கமும் சூட்டினார். சூட்டும் பொழுது, ‘கவியரசே!’ இது அசல் தங்கமா? முலாம் பூசப்பட்டதா?’ என்று நகைத்துக் கொண்டே வினவினார். நான் அறியேன் என்று நான் கூறுமுன், அடிகளார், ‘இல்லை! இல்லை! அசல் பவுன், அசல் பவுன்’ என்று பதறியவுடன் அனைவரும் குலுங்கச் குலுங்கச் சிரித்தோம்.

ஆசிரியப் பணியிற் சிறந்த முறையில் கடமையாற்றிய ஆசிரியர் களுக்குத் தமிழக அரசால் வழங்கப் படுகிற ‘நல்லாசிரியர்’ விருது (ஆண்டுநினைவில் இல்லை) கா.சு.துரைராசு என்ற பெயருடன் பணியாற்றிக் கொண்டிருந்த எனக்கும் கிடைத்தது. நல்லாசிரியர் எனப் பொறிக்கப்பட்ட வெள்ளிப் பதக்கமும் சான்றிதழும் மேதகு ஆளுநர் கே.கே.சா என்பவரால் வழங்கப் பட்டன. ஆசிரியப் பணிக்குக் கிடைத்த பரிசு இது.

தமிழகப் புலவர் குழு, தனது வெள்ளி விழாவை யொட்டிச் சேலத்தில் 8-10-1983இல் நடந்த விழாவில் ‘தமிழ்ச் சான்றோர்’ என்னும் விருதினை எனக்கு வழங்கியது. அப்பொழுது நான் கண் அறுவை மருத்துவம் செய்து கொண்டு, மருத்துவமனையில் இருந்தமையால் நேரிற் சென்று பெற இயலவில்லை. பின் அதற்குரிய பட்டையமும் பொன்னாடையும் சான்றிதழும் என்பால் வந்தடைந்தன.

நெய்வேலியில் உள்ள பாவாணர் தமிழ்க் குடும்பத்தார், என்னை வரவழைத்து ஒவ்வொரு குடும்பத்தினரும் என்பாற் பொழிந்த பேரன்பை என்னென்பேன்! என்னையும் அவர்தம் குடும்பத்துள் ஒருவனாக ஆக்கிக் கொண்டனர். குறிப்பாக அன்புவாணன், அறவாழி, தமிழரசியார், மீனாட்சி சுந்தரம், ஓட்டுநர் ஒருவர் இவர்கள் என்னை அன்பாற் பிணித்து விட்டனர்.

அப்பொழுது ஒரு நாள் தமிழரசி அம்மையார் தலைமையில் அவர்தம் இல்லத்தில் விருந்தொன்று நடத்தினர். “முடியரசன் அவர்கள் ஏழ்மையில் வாடுவதாக நாங்கள் அறிகிறோம். அதனால் திங்கள் தோறும் ஒரு தொகை அனுப்புவோம். மறுக் காது பெற்றுக் கொள்ள வேண்டுகிறோம்” என்றார்.