பக்கம் எண் :

18கவியரசர் முடியரசன் படைப்புகள் - 10

என் வரலாற்றை நானே எழுத வேண்டும் என்ற எண்ணம் எனக்கு என்றுமே இருந்ததில்லை. செயற்கருஞ்செயல்கள் செய்தவர் களுக்குத்தானே வரலாறு தோன்றும். யான் அத்தகு செயலொன்றும் செய்திலேன் என்பது எனக்கு நன்கு தெரியும். தெரிந்து வைத்திருந்தும் எழுதுவதற்குச் சில காரணங்கள் உள :

ஒன்று : நண்பர் கவிஞர் அரு. சோமசுந்தரத்திடம் உரை யாடும் பொழுதெல்லாம் வரலாறெழுதுமாறு அவர் என்னை வற்புறுத்தியது.

இரண்டு : என்னைப்பற்றித் தவறாகக் கருதிக் கொண்டிருக்கும் உலகிற்கு என் உண்மை நிலையுணர்த்துவது.

மூன்று : என் நூல்களை ஆய்வு செய்யும் மாணாக்கர்க்கு உறுதுணையாகும் எனக் கருதியது.

நான்கு : உடுக்கையிழந்தவன் கைபோல என் இடுக்கண் களைந்தவர் பலர். அவர்களை நினைவு கூர்வது.

இக்காரணங்களைத் தவிர, வரலாறு எழுத வேண்டும் என்ற உந்தார்வத்தை எழுப்பிய மற்றொரு காரணமும் உண்டு. கவிஞர் மன்னர் மன்னன் எழுதிய 'கறுப்புக் குயிலின் நெருப்புக் குரல்' தான் அவ்வார்வத்தை உசுப்பி விட்டது.

என் வாழ்க்கை வரலாறுதான் இது; முழுமையுடையதன்று; குறைபாடுடையதே. உமியில்லாத நெல் இல்லை. அது போலக் குறையில்லாத மனிதனும் இல்லை. ஆதலின் என்பாற் குறையிருத்தல் இயல்பே. உமியை விலக்கி அரிசியை மட்டுந் தந்துளேன். உமியால் யாது பயன்? முனை முரிந்த அரிசியும் உடைபடு குறுநொய்யும் இருத்தல் கூடும். அவற்றைக் களைந்து முழுமை காணல் உங்கள் கடன். என் நினைவிற்கு வந்தனவற்றை மட்டுந் தொகுத்துத் தந்துள்ளேன். என் எழுபதாம் அகவை வரை நிகழ்ந்தவற்றை அசை போட்டுப் பார்க்கின்றேன். அவ்வளவுதான். வேறொன்றும் இல்லை. 'திரும்பிப் பார்க்கிறேன்' என்றுதான் இந்நூலுக்குப் பெயர் வைத்தேன். பாவலர் மணி பழநி பெயர் மாற்றம் செய்தனர்.

அன்புள்ள,

காரைக்குடி,                                                                             முடியரசன்

10.10. 1990