பக்கம் எண் :

186கவியரசர் முடியரசன் படைப்புகள் - 10

சொற்கள், இனிய ஓட்டம், தமிழ் வளம், சொற்பொருள் நயம் இவை கலந்து மொழியுணர்ச்சியைத் தம் வாழ்க்கையுடன் ஒட்டி உறவாடும் அனுபவங்களின் படப்பிடிப்புகளாக, அவலச் சுவை யிலே பிறந்து, ஆத்திரத்தை மூட்டுவனவாக, சிரிக்க வைத்து இடித்துக்கூறுவனவாக அவைகள் விளங்கு கின்றன.

முடியரசனிடம் இரண்டு பண்புகளை நான் கண்டேன். ஒன்று அவரைக் கவிஞராக மற்ற ஒன்று நடிகராக. கல்லூரியிற் படித்த போது அவர் நாடகங்களில் நடித்திருக்கிறார். இனிமையாகப் பாடவும் தெரியும், ஆயினும் அவர் ஏனோ பண்ணொடு மேடை களிற் பாடுவதில்லை?

முடியரசருக்குக் குடும்பப் பற்றுக்குறைவு என்று சிலர் என்ணு
கின்றனர். அவரைவிடக் குடும்பப்பற்று மிக்கவர் இல்லை
யென்பது என் துணிவு. ஆனால் குடும்ப நிலைமையால் அவர்மன
முடைந்து வாழ்கிறார். அவர் வறுமையிலும் துன்பங்களிலும் சருக்கி விடாமல் காப்பது - தமிழ், ஆம், தமிழேயாகும்”.

- தென்றல் 4-12-54

‘தாமரை’ யென்னும் இதழில் எழில்முதல்வன் என்பார் எழுதிய திறனாய்வுக் கட்டுரையிலிருந்து சில பகுதிகள்; கட்டுரையின் தலைப்பு ‘தமிழ்க் கவிதை வரலாற்றில் பாரதிதாசன் பரம்பரை’ என்பது.

‘தற்காலக் கவிதை உலகத்தில் முடியரசன் தன் பெயருக்கேற்ப முடியரசனாகவே திகழ்கிறார். இவருடைய பாடல்களைத் தமிழ்க் கனல் என்று சொல்லலாம். பழைய மரபைக் கட்டிக் காப்பதிலே இவர் கண்ணுங்கருத்துமாக இருக்கிறார்.

கவிஞரின் மொழியுணர்ச்சி கங்கு கரையற்றது. தமிழை வணங்கும் தனிக் கொள்கை, சமுதாயச் சீர்திருத்த நாட்டம் இரண்டுமே அவரது கவிதைகளில் அடிநாதமாக ஒலிக்கிறது. ஆழ்ந்த நுட்பமான உணர்வுகளைக் கலை வடிவமாக்கி வெளிப் படுத்தும் ஆற்றல் இவரிடத்தில் இயற்கையாக அமைந்திருக்கிறது.’