| பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் | 223 |
அலைந்தோம். கிட்டவில்லை. அது கிடைத்திருப் பினும், இங்கேயே தங்கி எனக்குத் தூண்டுகோலாக இருந்திருப் பார். வணிகமும் நடைபெறவில்லை. வேலையும் கிடைக்க வில்லை. அதனால் ஈரோட்டிற்கே சென்றுவிட்டார். அவர் மனைவி மேரி இடைநிலையாசிரியர் பணியிலிருந்து கொண்டே புலவர், முதுகலை, இளங்கல்வியியல், இந்தி, உருசிய மொழி முதலிய தேர்வுகள் எழுதிப் பட்டம் பெற்றுள்ளார். மேரி தேர்வுகள் எழுத முழு முயற்சி, ஒத்துழைப்பு, தூண்டுகோல் அனைத்தும் சுப்பிரமணியமே. சுப்பிரமணியம் அன்பு கனிந்த நெஞ்சினர். உதவும் உளப்பாங்கு பெற்றவர். தொண்டு செய்வதில் வல்லவர். நான் ஒரு முறை ஈரோட்டிற்குச் சென்று இருந்தபொழுது, உடல் நலங்குன்றியது. இருபத்திரண்டு நாள் படுத்து விட்டேன். அப்பொழுது தாய் போல என்னைப் பேணிக்காத்தார். நேரம் அறிந்து மருந்து தருவதிலும், காலம் உணர்ந்து ஏற்ற உணவு கொடுப்பதிலும் இவர் நிகரற்றவர். இவரை உண்மையான கடமை தவறாத செவிலி என்றே சொல்லலாம். வெ.தருமராசன் புதுக்கோட்டை ஆசிரியர் வெ.தருமராசன், அழகப்பா நிழற்பட நிலைய உரிமையாளர் சுப.அழகப்பன் இருவரும் என் தம்பியராகப் பழகிய நண்பர்கள். நான் குருதி உமிழும் கொடு நோய்க்கு ஆளாகிப் புதுக்கோட்டையில் மருத்துவம் செய்து கொண்ட பொழுது எனக்குப் பேருதவிகள் புரிந்துள்ளனர். பகலிரவு உணவுகள் தருமராசன் கொணர்வார். காலை மாலை சிற்றுண்டிகள் அழகப்பன் பொறுப்பு. நான் நீராட வெந்நீர் வைத்துத் தருவதும் அழகப்பன் பணியே. இருவரும் உற்ற துணையாக நின்று என்னைப் பேணிக் காத்தனர். அந் நல்லுள்ளங்களை என்றும் நினைவு கூர்வதுண்டு. தருமராசன் சென்னையிலிருந்தபொழுது என் 'பூங்கொடி'க் காப்பிய வெளியீட்டு விழாவை அவரே முன்னின்று பொருட் செலவு செய்து சிறப்பாக நடத்தி வைத்தார். என்னைத் தலைசிறந்த கவிஞனாகக் காண வேண்டும் என்பது அவருடைய பேராவல். அண்மையில் இயற்கை எய்திவிட்டார். |