பக்கம் எண் :

பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம்237

மூன்று மணி நேரம் இருக்க நேர்ந்தது. முன்பே தாங்கள் வருவ
தாகச் சொல்லியி ருந்தால் ஆளுநரைக் கூட முடியரசருக்காகப் புறக் கணித்திருக்கலாம்.

நீங்கள் அடுத்த முறை புதுவைக்கு வரும்போது அவசியம் முன்பே எழுதிவிட்டு வரவும்.

தங்களைச்சந்திப்பதை ஒரு பெரும் பேறாகக்கருதுகிறேன். நன்றி.

- கி.வெங்கடசுப்பிரமணியன்
அக்டோபர் 8,1987

இவர் வைத்துள்ள அன்பும் மதிப்பும் அளவிடற்பாலனவோ? தொடர்பு கொண்ட நாள் சிறிது; தொடர்போ பெரியது! பெரிதினும் பெரிது.

சென்னையில் கயல் அச்சகவுரிமையாளர் தம்பி தினகரன், பாளையங் கோட்டை அஞ்சலகத்திற் பணியாற்றும் தமிழ் ஆய்வாளர் - இனிய நண்பர் சி.சு.மணி, பேராசிரியர் பா.வளனரசு, தம் வாழ்க்கையைக் குறளாயத் தொண்டுக்காகவே ஒப்படைத்துக் கொண்ட ஈர நெஞ்சினர் குறளீயம் வேலா இராசமாணிக்கனார் பழமை மறவாப் பேராசிரியர் உ.பாலசுப் பிரமணியம் அன்பின் குழைவாக விளங்கும் புலவர் அரசமாணிக்கனார் இவ்வாறு எண்ணிலவர் என்பால் அன்பு கொண்ட பெருமக்கள்.

இவருள் எவரை விடுவது, எவரை எழுதுவது? எழுதப் புகின் அஃது ஒரு தனி நூலாகும். ஆதலின் சிலரே நினைவு கூரப்பட்டனர்.

இவ்வாறு என் நண்பர்கள் காத்தளிக்காதிருப்பின் என் வாழ்வு என்னாகும் என்று எண்ணிப் பார்க்கிறேன். மலையுச்சியினின்று பாதாளத்தைப் பார்ப்பது போன்ற உணர்வு பெறுகிறேன். இத்தகு நண்பர்கள் வாய்க்கவில்லையெனில் கொள்கையில் நான் இவ்வாறு உறுதியாக நிலைபெற்று வாழ்ந்து கொண்டிருக்க இயலுமா?

எப்பொழுதோ உருக்குலைந்து போயிருப்பேன்.

“ஊரிலேன் காணி யில்லை
உறவுமற் றொருவ ரில்லை......
ஆருளர் களைகண் அம்மா”