பக்கம் எண் :

242கவியரசர் முடியரசன் படைப்புகள் - 10

மணியம் அவர்களும் பெரியண்ணன் அவர்களும் ‘பொன்னி’ என்னும் மாத இதழை மிகச் சிறந்த முறையில் நடத்தி வந்தனர். அவ்விதழில் அடிக்கடி எழுதி வந்தேன். ஒரு சமயம் ‘நிலவு’ பற்றிச் சில பாடல்கள் எழுதிப் பொன்னிக்கு விடுத்தேன். அப்பாக்களைப் ‘பாரதிதாசன் பரம்பரை’ என்ற தலைப்பில் வெளியிட்டனர். பின்னர், பாரதிதாசன் மணிவிழா மலருக்காக ‘பாரதிதாசன் என் தந்தை’ என்ற தலைப்பில் பாடல் எழுதுமாறு வேண்டினர். பொன்னி மலரில் அப்பாடல்கள் வெளிவந்த நாள்முதல், பாட்டுலகில் பாரதிதாசனைத் தந்தை யாகவே கருதி எழுதிவருகிறேன். பரம்பரையில் வெளிவந்த பாடல்களில் இரண்டே கிடைத்தன.

முகிலிடை நிலா

பாம்பொன்று நினைவிழுங்கும் என்று சில்லோர்
     பகர்ந்திடுவார் அதைநம்பார் அறிவில் நல்லோர்
வேம்பன்னார் எமைவீழ்த்த இனைய சூழ்ச்சி
     விளைத்தார்கள் தொலைத்தார்கள் தமிழர் ஆட்சி;
கூம்புவதேன் தாமரைகள் உன்னைக் கண்டு
     குடைந்துதேன் அருந்தமலர் சென்ற வண்டு
தேம்புவதைக் காணாயோ சிறையிற் பட்டு?
     சென்றிடுவாய் வெளியில்விடச் சொல்லி விட்டு

ஆரியத்தால் ஒளியிழந்த தமிழர் போல
     அழகிழந்தாய் உனையடைந்த மேகத் தாலே
நாரியரின் முகங்கண்டு நாணி உள்ளே
     நண்ணினை நீ என எண்ணி நகைத்தாள் முல்லை
வேறினத்தார் நாடாள வீணன் அல்லேன்
     வேலெடுத்துப் போர்தொடுப்பேன் வெற்றி கொள்வேன்
சீரழிப்பேன் எனக்கிளம்பும் வீரன் போலச்
     சிரித்தெழுந்தாய் மேகத்தைப் பிளந்து மேலே.

பொழுதெல்லாம் கவிதையுணர்வு

புரட்சிக் கவிஞர் கவிதையெழுதுவதற்கென்று நேரம் ஒதுக்கிக் கொண்டு எழுதுபவரல்லர். எந்த நேரமும் கற்பனையிலே மூழ்கித் திளைத்து மிதந்து கொண்டிருப்பார். உலகியல் உணர்வுகள், அவர் மனத்தில் நீர் மேற் பாசி போலத் தான் மிதக்கும். கற்பனை யுணர்வு,