பக்கம் எண் :

பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம்251

சுத்தானந்த பாரதியார் இசையுடன் பாடத் தொடங்கினார். பாவேந்தர் நெற்றி சுருங்கியது. முகம் மாறுபட்டது. வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தார். தலைமை தாங்கிய செந்தமிழ்க் காவலரிடம் வளைந்து நின்று வெளியிற் செல்ல ஆசிரியரிடம் மாணவர் ஆள்காட்டி விரலை மடக்கிக் காட்டி ஒப்புதல் கேட்டார். தலைவர் சரி என்பது போலத் தலையசைத்தார். வெளியிற் சென்ற கவிஞர் திரும்பி உள்ளே வரவே இல்லை.

கவியரங்கம் நிறைவு பெற்றது. கலைந்து சென்றோம். கவிஞர் ஓர் அறையில் வெண்சுருட்டுப் புகையினூடே அமர்ந் திருந்தார். ‘என்ன ஐயா இங்கே தனியே அமர்ந்திருக்கிறீர்கள்?’ என்றேன். ‘ஆமாப்பா, அந்த ஆளு சுதிப் பெட்டியைப் போட்டுக்கிட்டு வீச்சு வீச்சென்று கத்துறான். அதுனாலேதான் வெளியே வந்திட்டேன்’ என்றார். பின்னர், எதையோ நினைந்து கொண்டவர் போல் ‘இந்தாப்பா, ரேடியோக் காரங்க செக் தருவாங்க, வாங்கிக்கோ, நீ பாட்டுக்குப் போயிடாதே’ என்று கூறினார். தம்மையே மறந்து விடும் அவர். எனக்கு இப்படி அறிவுறுத்தினார்.

‘நீங்கள் வாங்கிக் கொண்டீர்களா’ என்றேன்? ‘இல்லை இனிமேல் தான் வாங்கணும், பாரதியாரைப் பற்றி நான் பேசணூமாம், அதைப் பதிவு செய்துக்கப் போறாங்களாம். அதுக்காக எதிர் பார்த்துக்கிட்டு இருக்கேன்’ என்று அமைதியாகப் பேசினார்.

சிறிது நேரத்தில் பாவேந்தர் உள்ளே அழைத்துச் செல்லப் பட்டார். வானொலி நிலையத்தில் பணியாற்றும் மாறன் அங்கு வந்தார். அவர் சொன்னார், ‘கவிஞருக்கு எழுதிக் கேட்டோம். இருநூறு கொடுத்தால்தான் வருவேன் என்று விடையெழுதி விட்டார். எங்கள் நிலைய விதிப்படி இருநூறு கொடுக்க இயலாது அவரையும் விட்டுவிட எங்களுக்கு மனமில்லை. அதனால் பாரதி யாரைப் பற்றிப் பேசுமாறு வேண்டிக் கொண்டோம். அவரும் இசைந்துவிட்டார்.

கவிதைக்கும் பேச்சுக்கும் இருநூறு என்பது எங்கள் கணக்கு, ஆனால் கவிதைக்கு மட்டும் இருநூறு, பேச்சு இலவசம் என்பது கவிஞரின் நினைப்பு, எப்படியோ எங்களுக்குச்சிக்கல் இல்லாமல் காரியம் முடிந்துவிட்டது, என்று பெருமிதப்பட்டுக் கொண்டார். பாவேந்தருக்கும் உலக நடைமுறைக்கும் எவ்வளவு தொலைவு என்பது இந்நிகழ்ச்சியால் நன்கு தெளிவாகிறதல்லவா?