பக்கம் எண் :

258கவியரசர் முடியரசன் படைப்புகள் - 10

அச்சிட்டு வெளிவந்தால், எவ்வளவு நல்ல பாட்டாக இருந்தாலும் எடுபடாது. நம்ம பிள்ளை ஒருவன் நம்ம புத்தகங் களை நல்லா-அழகா வெளியிடுகிறான்’ என்று மகிழ்ந்து கொண்டார். நூல்கள் நல்லதாளில் அழகாக அச்சிடப்பட்டு, நன்கு கட்டடமும் அமைந்திருந்தால் பாவேந்தர் மிகவும் மகிழ்வார். ‘நம்ம பிள்ளை’ என்று யாரைக் குறிப்பிடுகிறார் என்பது அப்போது எங்களுக்கு விளங்கவில்லை.

உணவுக்குப் பின் மாடிக்குத் துயிலச் சென்றோம். வை.சு.சண்முகனார் கீழ்வீட்டில் படுத்துக்கொண்டார். இரவெல்லாம் துயிலை மறந்து, கவிஞருடன் உரையாடிக் கொண்டிருந்தோம். அஃது எங்களுக்குக் கிடைத்தற்கரிய பேறு; எங்கள் வாழ்நாளில் ஒரு பொன்னாள். மனம் விட்டுப் பேசினார், பழகினார். எம்மை ‘இளைஞர்தாமே’ என்று கருதவில்லை. அவரும் எம்மையொத்த அகவையினர் போலவே மகிழ்ந்தும் சிரித்தும் பேசிப் பழகினார். ஒரு குழந்தையுடன் பழகுவது போன்ற உணர்வுதான் எங்களுக்கு ஏற்பட்டது. ‘குடியரசு ‘இதழ் பற்றி’ பிற செய்திகள் பற்றியும் பேச்சுத்தொடர்ந்தது.

இரவு 12 மணியாகி விட்டது. கீழேயிருந்து மணியொலித்தது. ‘ஏம்பா இன்னுந் தூங்கல்லையா? பேசினது போதும்; படுத்துத் தூங்குங்க என்ற உரத்த குரலும் மணியொலியைத் தொடர்ந்து வந்தது. இதோ படுத்துவிட்டோம் என்பது மறுமொழி. கவிஞர், சிரித்த வண்ணம்’, வாயைப் பொத்திக்கொண்டு மெதுவாய்ப் பேசுவோம்’ என்றார். தாழ்ந்த குரலில் பேசினோம்.

இடையில் கவிஞரிடம் ஒரு வினா எழுப்பினேன். ‘ஐயா, பார்ப்பனிய எதிர்ப்பில் மேலோங்கி நிற்கும் நீங்கள் பாரதிதாசன் என்று பெயர் வைத்துக்கொண்டது ஏன்?’ என்றேன். சிரித்துக் கொண்டே, ‘நல்லாக்கேட்டே! அந்தக் காலத்திலே அதே சாதியில் பிறந்த ஒருவன் ‘பார்ப்பானை ஐயர் என்ற காலமும் போச்சே’ என்று துணிந்து பாடினானே! அவனுக்கு எத்தனை தடவை வேண்டுமானாலும் தாசனாயிருக் கலாமே! இது ஒண்ணு போதாதா அவன் சாதிக்கு அப்பாற்பட்டவன் என்று சொல்ல? அதனாலேதான் துணிச்சலா, பாரதிதாசன் என்று பேர் வைத்துக் கொண்டேன், என்று விடை தந்தார். அப்பொழுது அவர் முகத்தில் உணர்ச்சி பளிச்சிட்டுப் படர்ந்தது.