பக்கம் எண் :

பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம்269

அரங்கிற்கருகில் அமர்ந்திருந்த. கி.வா.சகன்னாதன் அவர்கள் 'தயரதனுக்கு வெண்தாடி இல்லையே' என்றார். அதற்கு நான் ஈண்டு வெண்தாடியெனக் குறிப்பிட்டது நிறத்தையன்று; முதுமையைச் சுட்டிற்றென்க - என விடை கூறினேன்.

அவர்க்கருகில் இருந்த விஞ்ஞானி கே.எஸ்.கிருட்டினர் அவர்கள் துள்ளிக் குதித்துவிட்டார். 'எங்கே இன்னொரு முறை சொல்லுங்கள், இன்னொரு முறை சொல்லுங்கள்' என மூன்று முறை அப்பகுதியைச் சொல்ல வைத்து மகிழ்ந்தார்.

கம்பன் இந்தியெதிர்ப்பு

1965ஆம் ஆண்டு, தமிழகம் தழுவிய இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்து கொண்டிருக்கும் நேரம். கம்பன் திருநாள் வந்தது. 'கம்பன் புகழ் பெற வாழ்தல்' என்னுந் தலைப்பு எனக்குக் கொடுக்கப் பட்டது. இந்தி எதிர்ப்புணர்ச்சியை நான் வெளிப்படுத்த இயலாமல் தவித்துக்கொண்டிருந்தேன். (அரசியற் கூட்டங்களுக்குச் செல்லும் வழக்கமும் இல்லை) நல்ல வாய்ப்பு எனக் கருதிக் கம்பன் திருநாளில் கலந்து கொண்டேன்.

அண்ணா, கலைஞர் இருவருடன் இந்தியையும் மையமாகக் கொண்டு பாடல் புனைந்தேன். நேரடியாகக் குறிப்பிடவில்லை. என் வழக்கப்படி குறிப்பால் உணர்த்தினேன். இராமகாதையில் வரும் இராமன், இலக்குவன், சூர்ப்பனகை இம்மூவரையும் அண்ணா, தம்பி, அரக்கி எனக் கொண்டு என் உணர்ச்சிகளை யெல்லாம் கொட்டிவிட்டேன்.

கூட்டத்திலிருந்த பேராயக் கட்சியினர் சிலர் குழப்பம் விளை வித்தனர். அருகிருந்த மற்றையோர் அடக்கினர்.

தலைமையேற்ற தமிழ்க்கடல் இராய. சொக்கலிங்கனார், 'முடியரசன் நன்றாக மாட்டிக் கொண்டார்' என்று கூறினார். நானா மாட்டிக் கொண்டேன்? இராமன், இலக்குவன், சூர்ப்பனகை தாம் மாட்டிக் கொண்டனர் என்றேன்.

நிகழ்ச்சி முடிந்தபின், சா.கணேசன் அவர்கள், 'இவ்வளவு வெளிப்படையாகப் பாடியிருக்க வேண்டாமே' என்றார். வெளிப் படையாக நான் பாடவில்லையே; குறிப்பாலுணர்த்தினேன். நான் சொன்ன நிகழ்ச்சிகளில் மறுப்புரைக்க ஏதேனும் இட முண்டா? என்றேன். 'மறுக்க முடியாதது தான் உண்மைதான்; ஆனால் எதைச் சொல்கிறீர்கள் என்று நன்றாகத் தெரிகிறதே! கொஞ்சம் கட்டுப் படுத்தியிருக்கலாம்' என்று கூறினார்.