பக்கம் எண் :

278கவியரசர் முடியரசன் படைப்புகள் - 10

ஒருமுறை கவியரங்கிற்குத் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் தலைமையேற்றார். கவிஞர் எண்மர் கலந்து கொண்டோம். பண்டைய வள்ளல் எழுவரைப் பற்றி எழுவர் பாடினர். எட்டாம் வள்ளலென அழகப்பரை நான் பாடினேன்.

பல்வேறு அணிகள் அமையப் பாடினேன். பாடல்களின் வயப்பட்டார் அடிகளார். இறுதியில்,

அள்ளியள்ளி வழங்குதற்குக் கையை ஈந்தான்
   அழகாகப் பேசுதற்கு வாயை ஈந்தான்
வெள்ளமென வருநிதியம் வாழும் வீடு
   வினைமுயற்சி அத்தனையுங் கல்விக் கீந்தான்
உள்ளமெனும் ஒருபொருளை உரத்துக் கீந்தான்
   உடலினையும் கொடுநோய்க்கே ஈந்தான் அந்தோ!
உள்ளதென ஒருபொருளும் இல்லாப் போதும்
   உயிருளதே கொள்கவெனச் சாவுக் கீந்தான்

என்ற பாடலைப் பாடியமர்ந்தேன்

அடிகளார் முடிப்புரை கூற எழுந்தவர் உணர்ச்சிவயமாகி அழுதுவிட்டார். பேச நா எழவில்லை. சிறிது நேரம் அமைதியாக இருந்து, ‘கவிதை இவ்வாறு தான் இருத்தல் வேண்டும், உள்ளத்தை உயர்த்துவதாக - உணர்ச்சி ஊட்டுவதாக அமைதல் வேண்டும்’ என்றார். ‘மேலும் முடியரசன் அழகப்பரின் வள்ளன்மையை ஒவ்வொன்றாகக் கூறி, அழகப்பர் நோய்வாய்ப் பட்டதையும், மறைந்தமையையும், ‘உடலினை நோவுக்கீந்தான், உயிரைச் சாவுக்கீந்தான், என வள்ளன்மையாகக்’ குறிப்பிட்ட பாங்கு நினைந்து நினைந்து மகிழற்குரியது’ எனப் புகழ்ந்து மகிழ்ந்தார்.

ஈண்டு மற்றொரு செய்தியையும் குறிப்பிடுதல் வேண்டும். நிகழ்ச்சி முடிந்து இறங்கியவுடன் அப்பொழுது கல்லூரி முதல் வராக இருந்த அலக்சாந்தர் ஞானமுத்து அவர்கள், என் பாடலைப் பாராட்டி விட்டுக் கையிலிருந்த வெண்சுருட்டை (சிகரெட்டு) நீட்டினார். உடனே ஒன்றையெடுத்துக் கொண்டேன். தொடர்ந்து தீக்குச்சியைப் பற்ற வைத்து அதையும் நீட்டினார். பற்ற வைத்துக் கொண்டேன். அருகிலிருந்த பேராசிரியர் முனைவர் வ.சுப.மாணிக் கனார். ‘தீ நட்போ?’ என மொழிந்தார். முதல்வர் சிரித்துவிட்டார்.