பக்கம் எண் :

பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம்31

பிரவேச பண்டித வகுப்புத் தேர்வில் இலக்கணம், இலக்கியம், கட்டுரை இவற்றிற்குத் தனித்தனியே தேர்வுத்தாள் இருப்பது போலச் செய்யுளியற்றலுக்கும் தனித் தேர்வுத் தாளுண்டு. அதன் பொருட்டுப் பாடற்பயிற்சியளிப்பர். ஒரு கருத்தைக் கொடுத்துப்பாடச் சொல்வதுண்டு; இன்ன எழுத்திற்றொடங்கி இன்ன எழுத்தில் முடியுமாறு பாடுக என்பதுமுண்டு. முறிப்படி தந்து பாடச் சொல்வது முண்டு. பயிற்சியிலும் வகுப்புத் தேர்விலும் என் பாடற்கே முதலிடம் கிடைக்கும். இவ்வகுப்பிற் பெற்ற பயிற்சிதான், என் கவிதையுணர் வாகிய வேலுக்குப் போர்ப் பயிற்சியாக அமைந்தது.

கடவுட் பாடல்களே அப்பொழுது பாடுவது வழக்கம். மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் தேர்வு நடந்த பொழுது, மீனாட்சி யம்மன் மீது ஒரு நேரிசை வெண்பாவும் சிவஞான முனிவர் வரலாறு பற்றி 20 வரிகளில் ஒரு அகவற்பாவும் பாடப் பணித்தனர். குறிப்பிட்ட நேரத்திற்குள் பாடுதல் வேண்டும். அங்கு நான் பாடிய அகவற்பா நினைவில் இல்லை. வெண்பா மட்டும் நினைவிற்கு வருகிறது.

நீல மணிநிறத்தாய் நின்மலன்றன் பாகத்தாய்
கோல வுருவுடையாய் கொண்டல்மீன் - போல
விழியுடையாய் என்றன் விழுமங்கள் யாவும்
அழிவுறவே நல்குன் அருள்

இதுதான் அவ்வெண்பா.

வித்துவான் வகுப்பு

1939 இல் பிரவேச பண்டிதத் தேர்வும் சென்னைப் பல்கலைக் கழக வித்துவான் புகுமுக வகுப்புத் தேர்வும் எழுதி வெற்றி பெற்றேன். பின்னர் சபையில் கணேசர் செந்தமிழ்க் கல்லூரி யொன்று தொடங் கப்பெற்றுச் சென்னைப் பல்கலைக் கழகத் தேர்வுக்கு மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். நானும் வித்துவான் முன்னிலை (பிரிலிமினரி) வகுப்பிற் சேர்ந்து பயின்றேன்.

மீ. முத்துசாமிப்புலவர், மல்லிங்கசாமி, வை. சுப்பிரமணிய ஐயர், வீர. செல்லப்பனார், பு.ரா. மீனாட்சி சுந்தரனார் போன்ற ஆசிரியப் பெருமக்கள் எனக்குப் பாடங்கற்பித்தனர். என் நெஞ்சில் தமிழ் கொலுவிருக்கச் செய்தவர் முத்துசாமிப் புலவரே. நல்லுள்ளம் வாய்க்கத்துணை நின்றவர் வீர. செல்லப்பனார்.