பக்கம் எண் :

பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம்67

எடுத்துக் கொண்டு நான் தங்கியிருக்கும் தம்புச் செட்டித் தெருவுக்கு ஓடி வருவார்.

என்னைத் தம்பியாக ஏற்றுக் கொண்டு உரிமையுடன் பழகியமைக்கு ஒரு எடுத்துக்காட்டே போதும். ஒரு நாள் முகம் வழித்துக் கொள்ளும் பொழுது மீசை ஒழுங்குபட அமையாமற் போனமையால் முழுவதும் எடுத்து விட்டேன். பள்ளியில் ஒருவகுப்பை முடித்துவிட்டு அடுத்த வகுப்பிற்காக மாடிப் படியில் ஏறிச் செல்கிறேன். அவர் இறங்கி வருகிறார் ‘மீசையை ஏன் எடுத்து விட்டாய்?’ என்று அதட்டினார். நான் காரணம் சொல்லு முன் ஓங்கி அறைந்து விட்டுச் சென்று விட்டார். அவர் வீட்டில் பலநாள் நான் தங்கியிருக்கிறேன். அப்பொழு தெல்லாம் காலையில் குடங்குடமாக நீர் கொண்டு வந்து, தலையில் ஊற்றி, அவரே நீராட்டி விடுவார். உரிமையும் அன்பும் ஒத்த நிலையில் செலுத்துவார்.

ஒருநாள் முனைவர் மா.இராசமாணிக்கனாரை அடுத்த வீட்டிலிருந்த அரசு அலுவலர் ஒருவர் கீழ்த்தரமாகப் பேசி விட்டார். எவனாவது, தமிழையோ தமிழாசிரியரையோ பழித்து விட்டால் அழகுவேலண்ணனுக்கு நெற்றிக் கண் திறந்துவிடும். பள்ளி முடிந்ததும் அன்று மாலையே நாங்கள் (திருமாவளவன், நான், அண்ணன்) மூவரும் சென்று அவ்வலுவலரை அடித்து விட்டோம். அலுவலருக்கு எங்களை யாரென்று தெரியாது; தெருவில் விளையாடிக் கொண்டிருந்த மாணவர் சிலர், அடையாளஞ் சொல்லி விட்டனர். அடிபட்ட அலுவலர், காவல் நிலையத்தில் எழுதி வைத்து விட்டார்.

இரவு ஒரு மணிக்கு இராசமாணிக்கனார், நான் தங்கியிருந்த வீட்டுக்கு வந்து, என்னை யெழுப்பி, நிலைமையை விளக்கி விட்டு, ‘நீங்களொன்றும் கவலைப்பட வேண்டாம்; என் மைத்துனர் புலவர் செல்வராசிடம் கூறியிருக்கிறேன்; எதற்கும் நீங்களும் விழிப்பாக இருங்கள்; ஒரு வேளை காவல் நிலையத் தார் உங்களிடம் கேட்டால் நான் சொல்வது போலச் சொல்லி விடுங்கள்’ என்று வழியும் சொல்லித் தந்தார். புலவர் செல்வராசின் முயற்சியால் வழக்கில்லாமற் போய்விட்டது.

முடியரசனுக்கு முட்டுக்கட்டை

கவிஞர் தமிழ்ஒளி, குயிலன் என்னும் நண்பர் இருவரையும் அடிக்கடி சந்திப்பதுண்டு. என்பால் அன்புடையவர்தாம்; எனினும்