பக்கம் எண் :

94கவியரசர் முடியரசன் படைப்புகள் - 10

கேட்கிறாரோ அப்படிச் சொல்கிறேன் - என்றேன். ‘வேண்டாம் வேண்டாம்; நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று சொல்லி, வகுப்பிற்குச் செல்ல விட்டார்.

முதற் பிரிவேளையே என் வகுப்பிற்குள், தலைமையாசிரியரும் கல்வி அலுவலரும் நுழைந்தனர். ‘இவர்தான் மிஸ்டர் முடியரசன்’ என்று தலைமை ஆசிரியர் அறிமுகம் செய்து வைத்தார். பாடம் நடத்துமாறு அலுவலர் பணிக்கப் பாடம் நடத்தினேன் 15 மணித் துளிகள் இருந்து, கேட்டுச் சென்று விட்டனர்.

பின்னர்த் தலைமையாசிரியர், ‘மாலையில் நடைபெறுங் கூட்டத்தில் டி.இ.ஒ. பேச்சுக்கு நீங்கள் தான் நன்றி சொல்ல வேண்டும்’ என என்னிடம் கூறினார். நான் மறுத்தும் விட வில்லை. கூட்டத்தில் கல்வியலுவலர் ‘ஆசிரியர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்; நான் மகிழ்ச்சியாக இருப்பதால்தான் என் தலை முடி ஒன்று கூட நரைக்கவில்லை’ என்று கூறி, நல்லுரைகள் பலவும் எடுத்து மொழிந்தார்.

நான் நன்றி கூறும் பொழுது, நம் மாவட்டக் கல்வியலுவலர் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறித் தம் தலை முடியின் கருமையைச் சான்று காட்டினார். முடி, கருமையே தவிர உள்ளம் செம்மையானவர். கீழே செம்மையும் மேலே கருமையும் உடையவர். கருப்பும் சிவப்பும் சேர்ந்தால் அது மகிழ்ச்சிக்கு அறிகுறி என்பதை நமக்கு விளக்கிக் காட்டினார் என்று கூறினேன். தலைமையா சிரியரும் பிறரும் என் கருத்தைப் புரிந்து கொண்டு கைதட்டி வரவேற்றனர். அலுவலரும் அகம் மகிழ்ந்தார்.

பள்ளித்துணை ஆய்வாளர்தான் என்னைப்பற்றி மாவட்டக் கல்வி அலுவலரிடம் கோள்மூட்டியிருக்கிறார் என்பதைத் தலைமை யாசிரியர் வாயிலாக அறிந்து கொண்டேன். மறுநாள் அந்த ஆய்வாளர் பள்ளிக்கு வந்திருந்தார். நான் பள்ளிக்கு வெளியே வந்து, காலில் அணிந்திருந்ததைக் கையில் எடுத்துக் கொண்டு நின்றேன்.

தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஒருவர், உள்ளே சென்று, நிலைமையைக் கூறியிருக்கிறார். அஞ்சிய ஆய்வாளர், தலைமை யாசிரியரிடம் முறையிட, தலைமையாசிரியர் என்னையழைத்து, அமைதிப்படுத்தி கே.எஸ்.டி.யிடம் மன்னிப்புக் கேளுங்கள் என்று ஆய்வாளரிடம் சொன்னார்.