பக்கம் எண் :

எக்கோவின் காதல்163

படுத்துக் கொண்டேன். உறக்கமா வரும்! உள்ளத் துடிப்பு அதிகமாயிற்று. 'என்ன இவ்வளவு அன்பாக இருக்கிறாளே. வேறு ஆடவரையும் காணவில்லை' என்று எண்ணிக் கொண்டிருந்த நான் காலடிச் சத்தம் கேட்டுத் திரும்பினேன்.

"வெற்றிலை போடுங்களேன்" என்று சிரித்துக் கொண்டே மெத்தையில் உட்கார்ந்தாள். பாக்குப் பொட்டலம் அவள் கையா லேயே உடைக்கப்பட்டது. சுண்ணாம்பும் அவள் தான் தடவினாள். அப்புறம் எனக்குச் சொல்லிக் கொடுக்கவா வேண்டும்!

சிரித்தாள்; நானும் சிரித்தேன்,

காற்றின் தாக்குதலோ - அலையின் மோதுதலோ இன்றிப் படகு அமைதியாகச் சென்று கொண்டிருந்தது.

"சுந்தரம்! அவளை யாரென்று விசாரித்தாயா?" என்று குறுக்கிட்டுக் கேட்டான் நண்பன் மாறன்.

"ஓ, யாரென்றும் அறிந்துகொண்டேன். இனிமேல் அவள் என் மனைவி என்பதையும் உறுதி செய்துவிட்டேன்; எனது வாழ்க்கைப் பாதையை வேறுவழியில் திருப்பி விட்டேன். ஒரு வரம்பும் செய்து கொண்டேன்".

மாறா! அவள் ஒரு தாசி. பிறப்பிலேயே தாசியல்லள். சமூகம் அவளைத் தாசியாக்கிற்று. அவள் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவள். பருவம் வந்ததும் பெற்றோர், அவளுடைய மணத்திற்கு முயற்சி செய்தனர். இடையில் அவளுக்கும் அவளுடைய மாமன் மகனுக்கும் காதல் வளர்ந்து வந்தது. அவன் தன் தாயிடம் அவளையே மணக்க வேண்டும் என்று கூறினான். ஆனால் தாய் உடன்படவில்லை. தாய் சொல்லைத் தட்டி நடக்க முடியாத நிலைமையில் அவன் இருந்தான். அவளும் தன் தாயிடம் கூறினாள், அத்தானைத் தான் மணப்பேன் என்று. அவள் உடன்பட்டாலும் 'மாப்பிள்ளை வீட்டார் ஒத்துக் கொள்ளாததால் நாமே வலியப் போவது அழகில்லை' என்று சொல்லிவிட்டாள்.

ஒருநாள் அவளும் அவனும் சந்தித்தனர். "அம்மா சொல் வதை மீறி எப்படிச் செய்வது? உன் விருப்பப்படி உன் வீட்டார் விருப்பப்படி நடந்துகொள். என்மேல் வருத்தப் படாதே." என்று சொல்லிவிட்டான்.