பக்கம் எண் :

56கவியரசர் முடியரசன் படைப்புகள் - 12

மின்னல் ஒளியே விலைமதியா ரத்தினமே
     கன்னல் பிழிந்து கலந்த கனிச்சாறே"

என்றும் பிள்ளைக் கனியமுதைப் பற்றிப் பாடிய கவிஞர் குடும்பக் கட்டுப்பாடு வேண்டும் என்ற கருத்தை மிக அருமையாகக் கூறுகிறார்.

"காதலுக்கு வழி வைத்துக் கருப்பாதை சாத்தக்
      கதவொன்று கண்டறிவோம்; இதிலென்ன குற்றம்?
காதலுக்கோ பிள்ளை? தவிப்பதற்கோ பிள்ளை?

என்று துணிந்து வினவுகின்றார்.

துறைதோறும் துறைதோறும் மறுமலர்ச்சிக் கருத்துகளைப் பாடும் இயல்பினராகிய பாவேந்தர் மொழியைப் பற்றிப் பாடும் பாடல்களிலே ஓர் "ஆவேச" வெறியையும் அத் துறையில் மறுமலர்ச்சி காணத்துடிக்கும் ஆசைப் பெருக்கையும் காணலாம். அப்பாடல்களில் அவருடைய தாய்மொழிப் பற்றையும் அளவிலா ஈடுபாட்டையும் புதிய பாங்கையும் நாம் கண்டு மகிழலாம்.

"தாயெழிற் றமிழை, என்றன்
     தமிழரின் கவிதை தன்னை
ஆயிரம் மொழியிற் காண
     இப்புவி அவாவிற் றென்ற
தோயுறும் மதுவின் ஆறு
     தொடர்ந்தென்றன் செவியில் வந்து
பாயுநாள் எந்த நாளோ
     ஆரிதைப் பகர்வார் இங்கே?"

என்ற பாடல் கவிஞருடைய ஏக்கத்தை நமக்குப் புலப்படுத்தி நம்மை எழுச்சி கொள்ளச் செய்கின்றது. "ஆயிரம் மொழியிற் காண இப்புவி அவாவிற்றென்ற" செய்தியை நாம் பகர மாட்டோமா? என்ற அவாவையும் உண்டாக்குகிறது.

"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
       மங்காத தமிழென்று சங்கே முழங்கு"

எனத் தமிழ் உணர்ச்சியை ஊட்டுவதற்கு சங்கு முழக்கம் செய்த அளவோடு நில்லாது அதனை வளர்ப்பதற்கு வேண்டிய வழி வகைகளையும் வகுத்துத் தந்துள்ளார். "தமிழியக்கம்"என்னும் நூலில் அந்நெறிமுறைகளை அழகாகவும், ஆணித்தரமாகவும் எடுத்தியம்புகின்றார். அந் நூல் தமிழின் மறுமலர்ச்சிக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகவும் வழிகாட்டியாகவும் விளங்குகிறது.