பக்கம் எண் :

58கவியரசர் முடியரசன் படைப்புகள் - 13

'விரைவில் கொண்டு வந்து விடுங்கள்; அதே இடத்தில் வைத்து விடுவோம். ஐயாவுக்குத் தெரிந்தால் சத்தம் போடுவார்' என்று அம்மா சொன்னார்கள்.

இவ்வாறு 'திருடி'க் கொணர்ந்த அப்பாடலை அப்படியே அச்சுக் கட்டை (பிளாக்) எடுத்துக் கொண்டு, திரும்பக் கொண்டு போய் அம்மாவிடம் கொடுத்து முன் இருந்தவாறே வைத்துவிட்டோம்.

இவ்வளவு கெட்டிக்காரத்தனமாக நாங்கள் நடந்தும், ஐயா அவர்கள், 'என்னப்பா அது? உள்ளே போகிறீர்கள்! வெளியே வருகிறீர்கள்! மெதுவாகப் பேசுகிறீர்கள்! என்ன சங்கதி? ஏம்மா என்ன அது?' என்று அதட்டினார்.

'ஒன்றுமில்லை; இந்தப் பெட்டிகளை என்னால் தூக்க முடிய வில்லை. பிள்ளைகளை எடுத்து வைக்கச் சொன்னேன்' என்று மழுப்பி விட்டார்கள்.

அப்பொழுது நானும் தமிழண்ணலும் 'எழில்' என்னும் இதழில் தொடர்பு கொண்டு நடத்தி வந்தோம். அச்சுக் கட்டை எடுக்கப் பட்ட அப்பாடலை வெளியிட்டு, அதனருகில் தெளிவாக அப்பாடலை அச்சுக் கோத்து அச்சிட்டுக் குறிப்பும் எழுதி விளம்பி ஆண்டு மாசி இதழில் வெளியிட்டு விட்டோம்.

இதழ் சண்முகனாருக்கும் விடுக்கப்பட்டது. இதழைப் புரட்டிக் கொண்டு வந்த சண்முகனார் பாடலைப் பார்த்து விட்டார். அவ்வளவுதான் 'விசுவாமித்திரர்' ஆகிவிட்டார்.

'யார் இந்தத் திருட்டுத் தனம் செய்தது? வரட்டும் அந்தப் பையன்கள்; அம்மா! நீங்களுமா இதற்கு உடந்தை! இதற்குத் தான் அந்த அறைக்குள் போவதும் வருவதுமாக இருந்தீர்களோ?' என்று கனல் தெறிக்கப் பேசிவிட்டார். அம்மா வாய் திறக்க வில்லை.

இத் 'திருட்டு'க்கு அம்மா ஒத்துழைக்கவில்லை யென்றால் பாரதி பாடிய இப்பாடலைத் தமிழகம் இழந்திருக்கும்!

பாடல் வெளிவந்த பின்னர், சில நாள் கழித்து, சண்முகனார் இல்லத்துக்குச் சென்றோம். 'ஏம்ப்பா! இதென்ன அயோக்கியத் தனம்? எனக்குத் தெரியாமல் பாடலை எடுத்துக் கொண்டு போய், என் உடன் பாடில்லாமல் வெளியிட்டிருக்கிறீர்களே! இது பெரிய தப்பு. அம்மாவும் சேர்ந்து இதைச் செய்திருக் கிறார்கள்?' என்று தமக்கே உரிய உரத்த குரலில் கடிந்து கொண்டார்.