பக்கம் எண் :

66கவியரசர் முடியரசன் படைப்புகள் - 13

வயி.சு.சண்முகனார் சிங்கப்பூரில் தங்கியிருந்தார். அங்கிருந்தே அக்கலப்பு மணத்திற்கு வாழ்த்துத் தந்தி விடுத்திருந்தார்.

செல்வர் நீலாவதி இராமசுப்பிரமணியம் திருமணம் உறுதியான சீர்திருத்தத் திருமண மாகும். வாழ்த்துகிறேன்.

வயி.சு. ஷண்முகம்
பத்துப்பகாட், சிங்கப்பூர்,
15-10-1930

கலப்பு மணத்தில் - சீர்திருத்தத் திருமணத்தில் சண்முகனார் எத்தகைய உறுதியான பற்று வைத்திருந்தார் என்ற உண்மை யை இச்செய்தி உணர்த்துகிறது.

சாதிப்பற்றின்மை

சாதிப் பற்றும் அவரிடம் கண்டதில்லை. எப்பொழுதும், 'சண்முகம்' என்று மட்டுந்தான் கையொப்பம் இடுவார். 'செட்டியார்' என்ற சாதிப் பெயரைத் தம் பெயருடன் ஒட்ட மாட்டார்.

சாதிப் பற்றின்மையால் எவரையும் அரவணைத்துக் கொள்ளும் மனப்பாங்கு இவரிடம் மிகுந்து காணப்பட்டது. எவரையும் அயலாகக் கருதாது, உறவினராகவே எண்ணும் பண்புள்ளம் இவரிடம் ஒளி விட்டமையை இவர்தம் நிகழ்ச்சிகள் பல எடுத்துக் காட்டும்.

சாதிப்பற்று இல்லையெனினும் நாட்டுப் பற்று, மொழிப் பற்று, இனப்பற்று இவரிடம் மேலோங்கி நின்றன. இப்பற்று இவர்தம் உள்ளத்தின் அடித்தளத்திற் பதிந்து விட்டமையால் பொதுநலம் பேணி வாழ்வதிலும் தலைசிறந்து விளங்கினார்.

பொது நலப்பற்று

பொதுநலம் பேணுங் குறிக்கோளுக்காகவே 'தனவைசிய ஊழியர் சங்கம்' ஒன்று நிறுவப்பட்டது. சமுதாயச் சீர்கேடுகளை ஒழித்துக் கட்ட அரும்பாடு பட்டது இச்சங்கம். இச்சங்கம் முளைக்க முதற் காரணமாக விளங்கியவர் நம் சண்முகனார்.

தமிழறிஞர் சொ. முருகப்பனார் 'குமரன்' என்னும் இதழை நடத்தி வந்தார். அவ்விதழில், பல புனைபெயர்களில் சமுதாயக் கொடுமைகளைச் சாடி எழுதி வந்தார்.

'அஞ்சா நெஞ்சன்' என்னும் ஒரு பெயரும் அவர் பூண்டிருந்த புனை பெயர்களுள் ஒன்று. இப்பெயரில் எழுதும் கட்டுரைகள், உணர்ச்சியும் வேகமும் கொண்டு, காரசாரமாக வெளிவரும்.