அந்த அரண்மனைக்கு வராதவர்கள் இருக்க மாட்டார்கள். எந்த வேளையில், எத்தனை பேர்கள் வந்த போதிலும், அத்தனை பேர்களும் தங்கி, அறுசுவை உணவு உண்டு, உறங்கிச் செல்வது வழக்கமாயிற்று. எளியேனுக்கும் அந்தப் பாக்கியம் கிடைத்தது. ஒரு முறை, "நகை ஈகை இன்சொல் இகழாமை நான்கும் வகை என்ப வாய்மைக் குடிக்கு." என்ற குறளை எழுதி, அதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்று எழுதினேன். "தம்பி! உன் பாராட்டுக் கடிதம் கிடைத்தது மகிழ்ச்சி!" என்று பதில் கடிதம் எழுதியிருந்தார்கள் வை.சு. அவர்கள். 1943 முதல் அவர்களின் அமரத்துவத்துககுச் சில மாதங்கள் முன் வரையிலும் எனக்கு ஏராளமான கடிதங்கள் எழுதி யிருந்தார்கள். முல்லைப் பதிப்பகத்தைத் தொடங்கி, பாவேந்த நூல்களை நான் வெளியிட்டுக் கொண்டிருந்த காலத்தில் 'இன்ப மாளிகை'யில் பாவேந்தரும் வை.சு.வும் உரையாடிக் கொண்டிருந்தனர். அப்பொழுது, 'தமிழில் பிறமொழிக் கலப்பு ஏன்?' என்ற பிரச்னையை வை. சு. எழுப்பினார்கள். அன்று இரவே, 'தமிழ் இயக்கம்' என்ற பாடல்களை இயற்றினார் பாவேந்தர். மறுநாள் காலையில், என்னிடம் கொடுத்து, "உடனே இதை அச்சிட்டு வெளியிடு" என்றார் பாவேந்தர் (அப்படியே வெளியிட்டேன்.) அப்பொழுது அருகில் இருந்த வை.சு. அவர்கள், "எதையும் அழகாக அச்சிட்டு, வெளிப்படுத்துவதில் முத்தையாவுக்குத் தணியாத ஆர்வம் உண்டு" என்று கூறினார்கள். அவர்கள் அன்று கூறியது, தீர்க்கதரிசியின் சொல்லாகவே அமைந்தது. (இன்று வரை 16 பக்கங்களிலிருந்து 1000 பக்கங்கள் வரை 370 அச்சிட்டிருக்கிறேனே!) |