பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்179

விருப்பத்தைக் கேள்விப்பட்ட சதகர்ணியரசர் (நூற்றுவர் கன்னர்) `நீர் இமயம் போக வேண்டாம். உமக்கு வேண்டியதை நாங்கள் செய்து தருகிறோம்’ என்று தங்கள் தூதுவர் மூலம் சொல்லியனுப்பினார்கள்.

வேற்றுமை இன்றி நின்னொடு கலந்த
நூற்றுவர் கன்னரும் கோற்றொழில் வேந்தே
வடதிசை மருங்கின் வானவன் பெயர்வது
கடவுள் எழுதவோர் கற்கே யாயின்
ஓங்கிய விமயத்துக் கற்கால் கொண்டு
வீங்கு நீர்க் கங்கை நீர்ப்படை செய்தாங்கு
யாந்தரும் ஆற்றலம் என்றனர் என்று
வீங்குநீர் ஞாலம் ஆள்வோய் வாழ்கஎன

(சிலம்பு - கால்கோள்: 148-155)

அதுகேட்ட செங்குட்டுவன் தான் மற்றொரு காரியத்துக்காக வும் வடநாடு போவதாக அவர்களுக்குத் தெரிவித்துக் கங்கையாற்றைக் கடந்து போவதற்கு தோணிப்பாலம் முதலியன செய்து தரும்படித் தூதுவர் மூலம் சதகர்ணியரசருக்குக் கூறினான்.

நூற்றுவர் கன்னர்க்குச் சாற்றி யாங்குக்
கங்கைப் பேர்யாறு கடத்தற் காவன
வங்கப் பெருநிரை செய்க தாம்

(சிலம்பு - கால்கோள்: 164-165)

என்று தூதுவர் மூலம் நூற்றுவர்கன்னர்க்குச் செய்தி சொல்லி யனுப்பியதாகச் சிலம்பு கூறுகிறது.

இவன் விரும்பியவாறே நூற்றுவர்கன்னர் கங்கை யாற்றில் தோணிப்பாலம் அமைத்துத் தந்தனர்; இவன் தன் சேனைகளுடன் அப்பாலத்தைக் கடந்து இமயஞ் சென்றான்.

பாடி யிருக்கை நீங்கிப் பெயர்ந்து
கங்கைப் பேரியாற்றுக் கன்னரிற்பெற்ற
வங்கப் பரப்பின் வடமருங் கெய்தி

(சிலம்பு - கால்கோள்: 175-177)

என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.