பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்237

எல்லையாகவுடையவன் என்றும் பொருள் கூறப்படுகிறது. மேலோட்டமாகப் பார்க்கும் போது இப்பொருள்கள் சரியானவை என்று தோன்றுகின்றன. ஆனால், சிந்தித்து ஆராய்ந்து பார்க்கும்போது இப்பொருள்கள் தவறானவை என்று தெரிகின்றன.

இமயவரம்பன், இமயமலையைத் தன்னுடைய இராச்சியத்திற்கு எல்லையாகவுடையவன் என்று பொருள் கொண்டால், மற்ற மூன்று திசைகளின் எல்லை என்ன என்னுஞ் கேள்வி எழுகின்றது. ஒரு நாட்டுக்கு எல்லை கூறும்போது அதன் நான்கு திசை களுக்கும் எல்லை கூறவேண்டுமல்லவா? வடக்கு எல்லையாக இமயமலையை மட்டுங் கூறினால் போதுமா? இமயமலையை வட எல்லையாகவுடையவன் மற்ற மூன்று திசைகளிலும் கடலை எல்லையாகக் கொண்டிருந்தான் என்று கொள்ளவேண்டும். அப்படியானால், வடக்கே இமயத்தையும் மற்றக் கிழக்கு மேற்குத் தெற்குத் திசைகளில் கடல்களையும் எல்லையாக வுடைய அரசன் பாரத நாட்டின் சக்கரவர்த்தியாக அல்லவா இருக்க வேண்டும்! சேர நாட்டுச் சேர மன்னர்களில் ஒருவரேனும் இந்தியா தேசத்தின் சக்கரவர்த்தியாக இருந்து இமயம் முதல் குமரி வரையில் ஆட்சி செய்ததாகச் சரித்திரத்தில் காணப்படவில்லை. ஆகவே, 1500 மைல் நீளமுள்ள இமய மலையை வட எல்லை யாகக் கொண்டிருந்த படியால் சேரன் இமயவரம்பன் என்று பெயர் பெற்றான் என்று கூறுவது பொருந்தாது. அது பொருளற்ற வெற்றுரையாகும்.

சேர மன்னர் தங்களுடைய அடையாளமாகிய வில்லின் உருவத்தை இமயமலைப் பாறையில் செதுக்கி வைத்தபடியால் அவர்களுக்கு இமயவரம்பர் என்னும் பெயர் ஏற்பட்டதென்று சிலர் சொல்லக்கூடும். இக்கருத்தும் ஏற்கத்தக்கதன்று. ஏனென்றால், இமயமலைப் பாறையில் சேர அரசர்கள் மட்டும் தங்கள் அடை யாளத்தைப் பொறித்து வைக்கவில்லை. ஏனைய சோழ பாண்டியர் களும் தங்கள் அடையாளமாகிய புலி, கயல்களின் உருவங்களைப் பொறித்துவைத்துள்ளனர் என்று சங்க நூல்கள் கூறுகின்றன.

செருவெங் காதலில் திருமா வளவன்
........ .............. ................ ..............
இமையவர் உறையும் சிமையப் பிடர்த்தலைக்
கொடுவரி ஒற்றிக் கொள்கையிற் பெயர்வோற்கு

(சிலம்பு 5: 90-98)