பக்கம் எண் :

28மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1

இவற்றிற்கு மாறாகக் கடம்பு எறிந்த அரசன் கண்ணகிக்குக் கல்நாட்டு விழா நடைபெற்றபோது உயிருடன் இல்லை என்று குறிப்பிடுவதையும் காண்கிறோம்.11

ஓரிடத்தில் யவனரைப் பிணித்தவன் என்றும். பாரதப் போரில் சோறு வழங்கியவன் என்றும், கடம்பறுத்தவன் என்றும் மூன்று வரிப் பாடல்கள் சேரனை வாழ்த்துதல் என்னும் ஒரு பொருள்மேல் அடுக்கி வந்துள்ளன.12 இச் செய்தியைப் பொதுப்படையாகக் குறிப்பிடும் இடமும் உண்டு.13

இவற்றையெல்லாம் வைத்துக்கொண்டு நாம் பார்க்கும்போது கடம்பு எறிந்தவன் நெடுஞ்சேரலாதன் என்பதையும், அவனது அச் செயல்களுக்கு உறுதுணையாகச் செங்குட்டுவனும், மாந்தரஞ் சேரல் இரும்பொறையும் இருந்தார்கள் என்பதையும் நாம் அறிகிறோம்.

வன்சொல் யவனர் பிணித்தல்

கடம்பு தடிந்த போர்ச்செய்தி, நெடுஞ்சேரலாதனைச் சிறப்பிக்கும் பதிகத்தில் கூறப்படவில்லை. பதிகத்தில் யவனரைப் பிணித்ததாகக் கூறப்படும் செய்தி, பாடல்களில் கூறப்படவில்லை. எனவே, கடம்பு தடிந்தது போரின் விளைவே. ‘வன்சொல் யவனர்’14 என்று குறிப்பிடப் பட்டுள்ளவர் கடம்பு தடிந்த போரில் பிடிபட்ட போர்க் கைதிகள் எனலாம். இந்தப் போர்க் கைதிகளைப் பிணித்துக்கொண்டு வரும் போது அவர்களுடைய கைகளைப் பின்புறத்தில் சேர்த்துக்கட்டியும், தலையில் நெய்யை ஊற்றியும் அழைத்து வந்தனர். போர்க் கைதிகளை இவ்வாறு அழைத்துவருவது கிரேக்கர் மரபு. நெடுஞ்சேரலாதன் சார்பில் அழைத்து வந்த செங்குட்டுவன் பகைவரின் மரபுக்கு மதிப்பளித்து அழைத்து வந்தான்.15


11. சிலப். 28 : 135 12. ௸ 29 : ஊசல்வரி: 23:3, 24:2, 25:1

13. ௸ 29 ; வள்ளைப்பாட்டு 14. பதிற் பதி. 2 : 8

15. தமிழர்கள் போர்க் கைதிகளை எவ்வாறு நடத்தினார்கள் என்பதை விரிவாகக் குறிப்பிடத்தக்க சான்றுகள் இல்லை. எனினும் கனகவிசயர் வரலாறும், கரிகாலன் காவிரிக்குக் கரை அமைத்த வரலாறும் போர்க் கைதிகள் வெற்றி பெற்றவரின் ஆக்கப்பணிகளைச் செய்ய அழைத்துவரும் வழியிலும் அழைத்து வந்த பின்னரும் பயன்படுத்தப்பட்ட நிலைமையைக் காட்டுகின்றன. கணையன், கணைக்காலிரும்பொறை, பெருஞ்சேரலிரும்பொறை ஆகியோர் சிறைவைக்கப்பட்ட வரலாறுகளும் உண்டு.