290 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1 |
3. பாரதப் போரில் சேரன் சோறு அளித்தது உண்மையானால், இந்தச் சிறப்பான செய்தியைப் பாரதம் ஏன் கூறவில்லை. பாண்டிய னுடைய மகள் அல்லி (சித்திராங்கதை)யை அருச்சுனன் மணந்தான் என்னும் கதைகளையெல்லாம் கூறுகிற பாரதம் இருபடைக்கும் பெருஞ்சோறு கொடுத்த செய்தியை ஏன் கூறவில்லை? இது மிக முக்கியமான செய்தியல்லவா? 4. தங்கள் சேனைக்குச் சோறு கொடுக்கக்கூட இயலாத அவ்வளவு வறியவர்களா பாண்டவரும் கௌரவர்களும்? 5. இருதரத்தார் போர் செய்யும்போது இரண்டு படைக்கும் சோறு அளித்த செய்தி உலகத்தில் யாண்டும் கேட்டதும் இல்லை; கண்டதும் இல்லை. 6. வள்ளன்மைக்காக இருதரத்துப் படையினருக்கும் சோறு வழங்கினான் என்றால், சிறியவருக்கு வழங்குவதே வள்ளன்மை யாகும். பாண்டவரும் துரியோதனாதியரும் அரசர்கள். வறியவர்கள் அல்லர். ஆகவே, (வள்ளன்மைப் பொருட்டு இவர்களுக்குச் சோறு வழங்கினான் என்பது பொருந்தாது. 7. கி. மு. 1500-ல் நிகழ்ந்ததாகக் கருதப்படுகிற பாரதப் போரில் சேரன் சோறு கொடுத்தான் என்னும் செய்தியைக் கூறும் ஒரு செய்யுள் கிடைத்திருக்கிற என்றால், அக்காலத்தில் இருந்து கடைச் சங்க காலம் வரையில் உள்ள வேறு செய்திகளைப் பற்றிய செய்யுள்கள் எங்கே? இடைப்பட்ட காலத்தில் எத்தனையோ சரித்திர நிகழ்ச்சிகள் நடந்திருக்கக் கூடும் அல்லவா? அவற்றைப் பற்றிய செய்யுள்களும் இருக்கவேண்டும் அல்லவா? அவையெல்லாம் எங்கே? அவையெல்லாம் கிடைக்காதபோது இந்த ஒரு செய்யுள்மட்டும் 3500 ஆண்டுகளாக அழியாமல் இருக்கிறது என்று எப்படி நம்புவது? இவற்றுக்கெல்லாம் விடை என்ன? இத்தனை முரண்பாடுகள் உள்ள இச்செய்தியை, பெருமைபடத் தக்கது என்னும் காரணம்பற்றி மற்றவர் ஏற்றுக்கொண்டாலும், வரலாற்று ஆராய்ச்சியாளர் எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்? எனவே தான், இச்செய்யுள்களில் கூறப்படும் ஐவர், ஈரைப்பதின்மர் என்பதற்கு வேறுபொருள் இருக்கவேண்டும் என்றும், அது பாண்டியர் சேரர் போரைப் பற்றியதாக இருக்கக்கூடும் என்றும் எனது கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். நண்பர் தேவநேயப் பாவாணர் “சேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் படை |