பக்கம் எண் :

378மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1

விழல் மன்னர்’,18 ‘படை மன்னர்’19 என்று பன்மையால் காட்டப்படுகின் றனர். மற்றும் சிவனடியான் கோச்செங்கணானால் வெல்லப்பட்டவன் ‘விளந்தைவேள்’20 என்ற தெளிவான குறிப்பும் உள்ளது. இந்த வகையிலும் மேற்கண்ட மூவேறு பகைவர்களும் வேறுபட்டவர் என்பது தெளிவாகிறது.

புறநானூற்றுக் கொளுவில் போர் நடந்த இடம் ‘திருப்போர்ப் புறம்’ என்று கூறப்பட்டுள்ளது. களவழியிலோ போர் நடந்த இடம் ‘கழுமலம்’21 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. திருமங்கை ஆழ்வார் போர் நடந்த இடம் ‘அழுந்தை’22 என்று குறிப்பிடுகிறனர். இந்த வகையிலும் மேற்கண்ட மூன்று போர் நிகழ்ச்சிகளும் வெவ்வேறானவையாய் அமைந்து விடுகின்றன.

புறநானூற்றுப்படி சோழனை எதிர்த்தவன் சிறையிலடைக்கப் பட்டு மானம் கருதி உயிரைவிடுகிறான். களவழிப்படி சோழனை எதிர்த்தவன் தன் யானையுடன் போர்க்களத்திலேயே உயிர் துறக்கிறான்.23 களவழி உரைகாரரோ சோழனை எதிர்த்தவன் சிறையில் அடைக்கப் பட்டுப் பொய்கையாரின் களவழி நூலால் விடுதலை பெறுகிறான் என்று கற்பனை செய்கிறார். மற்றும் திருமங்கை ஆழ்வாரோ சோழனை எதிர்த்தவர் மாண்டனர் என்கிறார். மற்றும் கலிங்கத்துப் பரணி விலங்கைத் தகர்த்து விடுதலை செய்யப்பட்டதோடு அரசுரிமையும் அளிக்கப்பட்டான் என்று கூறுகிறது.24 இவையெல்லாம் வரலாற்றுச்


18. வெங்கண்மா களிறுந்தி வெண்ணி ஏற்றி விறல்மன்னர் திறல்அழிய வெம்மா உய்த்த செங்கணான் கோச்சோழன் (௸ 6 - 6 - 4)

19. ‘பாரானர் அவர்இவர் என்று அழுந்தை ஏற்றப் படைமன்னர் உடல்துணியப் பரிமா உய்த்த தேராளன் கோச்சோழன்’ (பெரிய திருமொழி, 6 - 6 - 9)

20. ‘மின்னாடு வேல் ஏந்தும் விளந்தை வேளை விண்ஏறத் தனிமேல் உய்த்து உலகம் ஆண்ட தென்னாடன் குடகொங்கன் சோழன்’ ( ௸ 6 - 6 - 6)

21. களவழி. 36 : 2

22. விளந்தை என்பதற்கு ‘விளைந்த’ என்பதும் பாடம் (௸ 6 - 6- 6)

23. களவழி. 35 : 3 - 5

24. ‘களவழிக் கவிதை பொய்கை உரைசெய்ய உதியன் கால்வழித் தளையை வெட்டிஅர சிட்ட அவனும்’ (கலிங். இராச பாரம்பரியம், தாழிசை.18) உதியன் - சேரன், இங்குக் கணைக்கால் இரும்பொறையைக் குறிக்கிறது. கால்வழித்தளை - காலில் இடப்பட்ட விலங்கு