பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர் | 393 |
இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி ஆட்சி செய்ததாகக் கொள்ளலாம். இவனுக்குப் பிறகு யார் ஆட்சி செய்தார்கள் என்பது உறுதியாகத் தெரியவில்லை. சோழ மரபின் சிறப்புமிக்க கடைசி அரசன் சோழன் செங்கணான். அவன் இராசூயம் வேட்ட பெருநற்கிள்ளிக்குக் காலத்தால் இரண்டு மூன்று தலைமுறைகள் பிற்பட்டவனாவான். இவன் கணைக்கால் இரும்பொறையோடு போரிட்டான் என்பதைக் கண்டோம். கணைக் கால் இரும்பொறை என்றும் சேர வேந்தன் மாரிவெண்கோ என்னும் சேர அரசனுக்குக் காலத்தால் மிகவும் பிற்பட்டவன்; எனவே, இரண்டு தலைமுறைகளுக்குப் பின்னால் தோன்றியவன் எனக் கொள்ளலாம். மாரிவெண்கோ இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியின் சமகாலத்து அரசன் என்பது முன்னர்ச் சுட்டப்பட்டது. எனவே, சோழன் செங்கணான் கி. பி. 230 முதல் கி. பி. 255 வரை ஆட்சி புரிந்ததாகக் கூறலாம். ஏறக்குறைய ஆறு நூற்றாண்டுகள் (கி. மு. 300 முதல் கி. பி. 300வரை) சங்ககாலச் சோழ மன்னர் ஆட்சிபுரிந்தமை இந்தக் காலக்கணிப்பினால் புலனாகிறது. செங்கணானுக்குப் பிறகு களப்பிரர் இடையீட்டால், தமிழக அரசியல் வானிலிருந்து சோழ அரசமரபு பைய மறைந்துவிட்டது. ஆந்திர நாட்டில் ஆந்திரச் சோழ அரசமரபு ஒன்று கி. பி. நான்காம் நூற்றாண்டில் தோன்றியுள்ளதைக் காணுகின்றோம். |