பக்கம் எண் :

400மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1

கழுகு மலை

மதுரை மாவட்டம் மீனாட்சிபுரத்தையடுத்துள்ள இந்த மலையைப் பற்றிச் சங்கப் பாடல்களில் குறிப்புகள் இல்லை. எனினும் சங்க காலத்துக் கல்வெட்டுகள் இந்தக் மலையில் காணப்பெறும் சமணர் குகைகளில் உள்ளன. பாண்டிய அரசன் நெடுஞ்செழியன்பற்றியம் அவனது பகைவன் கடலன் வழுதிபற்றியும் அக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.15

ஆறுகள்

வையை, சிலம்பாறு, பஃறுளி, குமரி ஆகிய ஆறுகள் பாண்டிய நாட்டில் பாய்ந்தன என்று சங்கப்பாடல்களால் அறிகிறோம். இவற்றுள் குமரியாறும் பஃறுளியாறும் கடலில் மூழ்கிப்போன நிலப்பகுதியில் பாய்ந்தன. வையையாற்றிற்கு வைகை என்னும் பெயரும் வழங்கியது. இவ்வாற்றின் தென்கரையில் மதுரை நகரம் இருந்தது. இந் நகரம் வட்ட வடிவமாக தாமரைப் பூப்போல் அமைக்கப்பட்டிருந்தது. இந்த நகரத்தின் கோட்டைச் சுவருக்கு வெளியே அதைச் சூழ்ந்திருந்த அகழியில் வையை நதியின் நீர் பாய்ந்தது.16 வையையில் திரு மருதந் துறை என்னும் இடத்தில் சங்ககாலத்து மக்கள் புதுப்புனலில் நீராடி மகிழ்ந்தனர்.

சிலம்பாறு

திருமாலிருஞ்சோலை மலையில் தோன்றிப் பாய்ந்தது.17

பஃறுளியாறு

இது கன்னியாகுமரிக்குத் தெற்கிலிருந்த ஓர் ஆறு. கி. பி. முதல் நூற்றாண்டிற்கு முன் கடல்கோளினால் மறைந்து போயிற்று. குமரியாறும் மேற்கூறப்பெற்ற கடல்கோளினால் மறைந்தது.18


15. இந் நூலின் அடிப்படைச் சான்றுகள் - II, கல்வெட்டு வரிசை எண் 1 - 6

16. பரிபா. 12 : 9 - 10, கலி. 67 : 3 - 4

17. சிலப். 11 : 108; பரிபா. 15 : 21 - 23

18. ‘அக்காலத்து அவர் நாட்டிற்குத் தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளி என்னும் ஆற்றிற்கும் குமரி என்னும் ஆற்றிற்கும் இடையே ஏழு நூற்றுக் காவதம் - கடல் கொண்டு ஒழிதலால் குமரியாகிய பௌவம் என்றார்.’

- சிலப். 8 : 1 - 2 அடியார், உரை.