பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர் | 455 |
எனவே, சமண முனிவராகிய வச்சிர நந்தி மதுரையில் திரமிள சங்கத்தை நிறுவினார் என்றால், சமண முனிவரின் திராவிட சங்கத்தை நிறுவினார் என்பது பொருளாகும். அதாவது மத சம்பந்தமாக சமண முனிவரின் தமிழ்ச் சங்கத்தை ஏற்படுத்தினார் என்பது பொருள். வச்சிர நந்தி ஏற்படுத்திய தமிழச் சங்கம் தமிழ் மொழியை ஆராய்வதற்காக ஏற்பட்ட சங்கம் அன்று. சமண சமயத்தைப் பரப்புவதற்காக ஏற்படுத்தப் பட்ட சங்கம் ஆகும். இதை அறியாமல் வையாபுரிப் பிள்ளையவர்கள், வச்சிர நந்தியின் தமிழ்ச் சங்கமும் பாண்டியரின் தமிழ்ச் சங்கமும் ஒன்றே என்று கூறுகிறார். முதற் கோணல் முற்றுங்கோணல் என்பது பழமொழி. வச்சிரநந்தியின் சமண முனிவர் சங்கமும், பாண்டியரின் தமிழ் ஆராய்ச்சிச் சங்கமும் ஒன்றே என்று தவறான முடிவு கொண்ட பிள்ளையவர்கள், கி. பி. 470-இல் தான் தமிழ்ச் சங்கம் ஏற்பட்டது என்றும் இந்தச் சங்கத்தில்தான் தொல்காப்பியம் தோன்றியது என்றும் கூறி மற்றும் பல தவறான முடிவுகளைக் கூறுகிறார். கடுந் துறவிகளாகிய சமண முனிவர்கள் - சிற்றின்பத்தையும், கொலைகளையும் கடுமையாக வெறுக்கிற சமண முனிவர்கள் - தமிழ்ச் சங்கம் வைத்துக்கொண்டு காதற் செய்திகளையும், போர்ச் செய்திகளை யும் கூறுகிற அகநானூறு, நற்றிணை நானூறு, புறநானூறு, முதலிய செய்யுள்களை ஆராய்ந்தனர், இயற்றினர் என்று கூறுவது எவ்வளவு அசம்பாவிதம்! முற்றத் துறந்த சமண முனிவர்கள் இசையையும் நாடகத்தையும் ஆராய்ந்தனர் என்று கூறுவது எவ்வளவு முரண்பட்ட செய்தி! சங்கம் என்னும் சொல்லை வைத்துக்கொண்டு அவற்றின் உண்மைப் பொருளை ஆராயாமல் வெவ்வேறு காலத்தி லிருந்த வெவ்வேறு நோக்கமுடைய சங்கங்களை ஒன்றாக இணைத்து முடிபோடுவது என்ன ஆராய்ச்சியோ! வச்சிரநந்தி மதுரையில் ஏற்படுத்திய திரமிள சங்கம் (சமண முனிவர் சங்கம்) மதுரையைச் சூழ்ந்துள்ள எட்டுக் குன்றங்களில் நிலைத்து, “எண்பெருங் குன்றத்து எண்ணாயிரம் சமணர்க”களாகப் பெருகியது. அந்தச் சமண சங்கம் பாண்டிநாட்டில் சமண சமயத்தைச் செழிக்கச் செய்தது. அதனால் பிற்காலத்திலே சைவ நாயன்மார்களும், வைணவ ஆழ்வார்களும் தோன்றி, சமண சமயத்துடன் சமயப் போர் நிகழ்த்தினர். இச் செய்தியைப் பெரிய புராணம் முதலிய நூல்களில் |