பக்கம் எண் :

68மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1

படைச் செருக்கு

இவனது வெற்றிகளுக்கு உறுதுணையாய் அமைந்தவை போர்த் திறமும் இவனது படையின் ஆற்றலுமாகும்.

நாகப்பாம்பை இடிகொல்வதுபோலப் பகைவர்களைக் கொல்லும் ஆற்றல் மிக்கவன் இவன்.17 இவனது படை வீரர்கள் வாண்முகம் பொறித்த தழும்பினைப் பெற்றவர்களாய்ப் பயிற்சித் திறம் மிக்கு விளங்கினர்.18 தும்பை சூடித் தேரில் ஏறிவந்து இவனது நாட்டைத் தாக்கிய பகைவரின் தார்ப்படையை இவர்கள் போந்தை சூடி எதிர்த்து வென்று கொன்றனர்.19 இவனது படைகள் பகைவரின் யானைகளைக் கண்டு நிலைகொள்ளாது பாய்ந்தன.20

கொடைத் தன்மை

எல்லா வசதிகளையும் பெற்றவர்கள் செல்வர்கள். இவன் அத்தகைய வசதிகளையெல்லாம் பெற்றிருந்ததோடு அவற்றைப் பிறர்க்கு அளித்துச் செல்வர் செல்வனவாக விளங்கினான். சேர்ந்தோரை யெல்லாம் பாதுகாக்கும் கோட்டை அரணாக இவன் விளங்கினான்.21 இரவலர்கள் யாரும் இவனை நாடி வாராத காலத்தில் இவன் தானே சென்று தேடிப் பிடித்துத் தேரில் ஏற்றிக்கொண்டு வந்து அவர்களுக்குப் பரிசில்கள் நல்கினான்.22 அவர்கள் ஆசைப்பட்ட மொழிகளைப் பேசி, பின் பேசியபடியே நடந்து தன் சொல்லை உண்மையாக்கினான்.23 இரவலர்களுக்குப் பரிசில் நல்கியதோடு அமையாது அவர்கள் வாழ்ந்த ஊர்களையே வளம் பெருகச் செய்தான்.24

இவன் இரவலர்கள் சிறு துன்பம் அடைவதைக்கண்டு பெரிதும் அஞ்சி அதனைப் போக்கினான்.25 இத்தகைய பண்புகள் நிறைந்த இவனைப் பலரும் ‘வள்ளல்’ என்று புகழ்ந்துரைத்தனர்.26


17. பதிற். 51 : 26 - 28

18. ௸ 57 : 1 - 3

19. ௸ 51 : 31

20. ௸ 54 : 16 - 17

21. ..............

22. ௸ 55 : 10 - 11

23. ௸ 55 : 12 ‘நசைசால் வாய்மொழி’

24. ‘இரவல் மாக்கள சிறுகுடி பெருக உலகம் தாங்கிய மேம்படு கற்பின்’ (பதிற்....).

25. ..... 26. பதிற். 54 : 1