பக்கம் எண் :

70மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1

தழுவிக்கொண்டு ஆடும் துணங்கை ஆட்டத்தில் இவனும் தலைக்கை தந்து (தலைமையிடம் கொண்டு) நெளிந்து ஆடினான்.35 வெற்றிக்குப் பின் போர்க்களத்தில் ஆடும் துணங்கை ஆட்டத்திலும் இவன் பங்கு கொண்டான்.36 இவ்வாறு ஆட்டத்தில் ஈடுபட்டுத் தன் மனைவியையும் மறந்து நீண்ட நாள் வெளியில் தங்கிவிட்டதும் உண்டு.37 அரசாட்சியை மறந்து தங்கிவிட்டதும் உண்டு.38

இவன் தனது நாட்டைக் குழந்தையைக் காக்கும் தாய்போலக் காத்து வந்தான்.39 நன்னடத்தைக்குப் பெருமதிப்பளித்துச் சான்றோர் களைப் பேணி வந்தான்.40

உருவத் தோற்றம்

ஒளிவீசும் அணிகலன்களை இவன் அணிந்திருந்தான். போர்ச் சின்னமாக அணியும் உழிஞைப் பூவையும் பொன்னால் செய்து அணிந்துகொள்ளும் அணிவேட்கையன்.41 வேங்கையை வென்ற களிற்றின்மீது ஏறிக்கொண்டு இவன் சென்றது உண்டு.42

சிறப்புப் பெயர்கள்

வானவரம்பன்43 ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்44 என்பன இவனது சிறப்புப் பெயர்கள். இவன் ஆடற்கலையில் சிறந்து விளங்கினான் என்று குறிப்பிட்டோம். இதனாலோ, வருடை ஆடுகளை மீட்டுக்கொண்டு வந்தமையாலோ இவன் ‘ஆடு கோட்பாட்டுச் சேரலாதன்’ என்று சிறப்பிக்கப்பட்டான்.

மனைவி

இவன் மனைவி சிறந்த அறிவுநலம் வாய்க்கப்பெற்றவள்.45 இவன் ஆட்டத்தில் ஈடுபட்டுப் பலநாள் வெளியில் தங்கியிருந்த போது அவனைப் பிரிந்து தனிமையில் இவள் வாழ்ந்துவர நேர்ந்தது. அவன் பல நாள்கள் கழிந்து மீண்டும் இவளிடம் வந்த போது இவள் ஊடினாள்.46


35. பதிற். 52 : 14, 56 : 3

36. ௸ 57 : 4

37. ௸ 51 : 11 - 15

38. ௸ 59 : 19, ‘நாடு புறந்தருதல், நினக் குமார் கடனே’ என்று அறிவுறுத்தப் படுவதால் இது விளங்கும்

39. பதிற். பதி. 6 : 2 - 10

40. பதிற். 55 : 1

41. ௸ 56 : 5

42. ...........

43. ௸ 58 : 12; பதிற். பதி. 6 :6

44. பதிற். பதி. 6 : 11

45. பதிற். 55 : 1, ‘ஆன்றோள் கணவ’

46. ..........