பண்டைத் தமிழக வரலாறு - கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு | 133 |
வேறுபாடு உண்டு. இது எப்படியானாலும் கொங்கிளங் கோசர், கொங்கு நாட்டில் கண்ணகிக்குக் கோயில் அமைத்து வழிபட்டது உண்மை. செங்குட்டுவன் சேர நாட்டு வஞ்சி மாநகரத்தில் பத்தினிக் கோட்டம் அமைத்து விழாச் செய்வதைக் கண்ட கொங்கிளங் கோசர், பத்தினித் தெய்வத்துக்குக் கொங்கு நாட்டில் கோயில் கட்டி வழிபட்டதைச் சிலப்பதிகாரம் உரைபெறு கட்டுரை கூறுகிறது.5 கொங்கிளங் கோசர் பத்தினித் தெய்வத்துக்குத் திருச்செங்கோடு மலைமேல் கோயில் அமைத்தனர் என்றும், அந்தக் கோயில் பிற்காலத்தில் (தேவாரக் காலத்திலேயே) அர்த்தநாரீசுவரர் கோயில் என்று மாற்றப்பட்டது என்றும் அறிஞர்கள் கருதுகிறார்கள். சங்க காலத்திலும் அதற்குப் பிறகும் கொங்கு நாட்டுக் கருவூரில் ஆண்டுதோறும் நடந்த பேர் போன திருவிழா உள்ளிவிழா என்பது. அவ்விழாவில் கொங்கர் மணிகளை அரையில் கட்டிக்கொண்டு கூத்தாடினார்கள்.6 பௌத்தர், ஜைனர் ஆகிய மதத்தாரும் அக்காலத்தில் கொங்கு நாட்டில் இருந்தார்கள். அந்த மதங்களின் துறவிகள் ஊர்களில் தங்காமல் காடுகளிலே மலைக் குகைகளில் இருந்து தவஞ் செய்தார்கள். அவர்களைப் பற்றிச் சங்க இலக்கியங்களில் அதிகமாகக் காணப்பட வில்லை. அக்காலத்துத் துறவிகள் குன்றுகளிலும் மலைகளிலும் தங்கியிருந்து தவஞ் செய்ததைச் சங்கச் செய்யுளிலிருந்து அறிகிறோம். “பொரியரை ஞெமிர்ந்த புழற்காய்க் கொன்றை நீடிய சடையோ டாடா மேனிக் குன்றுறை தவசியர் போலப் பலவுடன் என்றூழ் நீளிடைப் பொற்பத் தோன்றும் அருஞ்சுரம்.” (நற்றிணை 141: 3-7) (ஞெமிர்ந்த - பரந்த. கொன்றை - சரக்கொன்றை மரம். புழற்காய் - துளை பொருந்திய. ஆடாமேனி - அசையாத உடம்பு, அசையாமல் தியானத் தில் அமர்ந்திருத்தல்; நீராடாத உடம்பையுடையவர் என்றும் பொருள் கூறலாம். ஜைன முனிவர் நீராடக் கூடாது என்பது அவர்கள் கொள்கை. தவசியர் - தவம் செய்வோர்.) |