பண்டைத் தமிழக வரலாறு - கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு | 145 |
வாங்கிக் கொண்டுபோன காரணத்தினாலே சமஸ்கிருத மொழியில் மிளகுக்கு யவனப் பிரியா என்று பெயர் கூறப்பட்டது. அந்தக் காலத்தில் தான் கொங்கு நாட்டுக்கும் யவன நாட்டுக்கும் வாணிகத் தொடர்பு ஏற்பட்டது. கொங்கு நாட்டிலே சிற்சில சமயங்களில் கதிர் மணிகள் உழவர்களுக்குக் கிடைத்தன என்று பழஞ் செய்யுள்களி லிருந்து அறிகிறோம். கொங்கு நாட்டின் வடக்கிலிருந்த புன்னாட்டின் நீலக்கல் சுரங்கம் இருந்தது என்று பிளினி என்னும் யவனர் எழுதி யிருக்கிறார்.3 படியூரிலும் இந்தக் கதிர்மணிகள் கிடைத்தன. (சேலம் மாவட்டத்துப் படியூர்). கோயம்புத்தூர் மாவட்டத்து வாணியம் பாடியிலும் நீலக்கற்கள் கிடைத்தன. அந்தக் காலத்தில் இந்த நீலக்கற்கள் உலகத்திலே வேறு எங்கேயும் கிடைக்கவில்லை. கொங்கு நாட்டில் மணிகள் கிடைத்ததைக் கபிலர் கூறுகிறார்.4 அரிசில்கிழாரும் இதைக் கூறுகிறார்.5 யவனர் இங்கு வந்து இவற்றை வாங்கிக்கொண்டு போனார்கள். உரோம சாம்ராச்சியத்திலிருந்த சீமாட்டிகள் இந்தக் கற்களைப் பெரிதும் விரும்பினார்கள். உரோம சாம்ராச்சியத்தில் இந்த நீலக் கற்கள் ஆக்வா மரினா (aqua marina) என்று பெயர் பெற்றிருந்தது. யவன வாணிகர்கள் கொங்கு நாட்டுக்கு வந்தது, முக்கியமாக இந்தக் கதிர்மணிகளை வாங்குவதற்காகவே. யவனர்கள் கொங்கு நாட்டுக்கு வந்து பொற்காசுகளையும் வெள்ளிக் காசுகளையும் கொடுத்து நீலக் கற்களை வாங்கிக் கொண்டு போனதற்கு இன்னொரு சான்று, அவர் களுடைய பழைய நாணயங்கள் கொங்கு நாட்டில் சமீப காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதுதான். கொங்கு நாட்டைச் சேர்ந்த பொள்ளாச்சி, வெள்ளலூர், கரூர் முதலிய ஊர்களில் பழைய காலத்து உரோம நாணயங்கள் பெருவாரியாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சேர நாடு, பாண்டி நாடு, புதுக்கோட்டை முதலிய இடங்களிலும் பழங்காலத்து உரோம நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இங்கு நம்முடைய ஆராய்ச்சிக்குரிய கொங்கு நாட்டில் கிடைத்த உரோம சாம்ராச்சியப் பழங்காசுகளை மட்டுங் கூறுவோம். பொள்ளாச்சி (கோயம்புத்தூர் மாவட்டம்): இங்கு ஒரு பானை நிறைய உரோமாபுரி வெள்ளிக்காசுகள் 1800ஆம் ஆண்டில் கண்டெடுக்கப் பட்டன. 1809ஆம் ஆண்டிலும் ஒரு புதையல் கண்டெடுக்கப்பட்டது. இந்தப் புதையலில் கிடைத்த காசுகள் பொற்காசுகளா, வெள்ளிக் காசுகளா என்பது தெரிய வில்லை. 1888ஆம் ஆண்டிலும் உரோமபுரிக் காசுப் புதையல் கண்டெடுக்கப்பட்டது. |