பண்டைத் தமிழக வரலாறு - கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு | 155 |
பெருஞ்சேரல் இரும்பொறை, அதிகமான் நெடுமானஞ்சியின் தகடூரின்மேல் படையெடுத்துச் சென்று முற்றுகையிட்டுப் போர் செய்த போது அரிசில்கிழார், போர்க்களத்தில் இருந்து அந்தப் போர் நிகழ்ச்சியை நேரில்கண்டார். பொன்முடியாரும் அப்போர் நிகழ்ச்சி களை நேரில்கண்டவர். தகடூர்ப் போரைப் பற்றித் தகடூர் யாத்திரை என்னும் ஒரு நூல் இருந்தது. அந்த நூலில் இப்புலவர்கள் பாடிய செய்யுட்களும் இருந்தன. அந்த நூல் இப்போது மறைந்துவிட்டது. சில செய்யுட்கள் மட்டும் புறத்திரட்டு என்னும் நூலில் தொகுக்கப் பட்டுள்ளன. தகடூர் மன்னனாகிய அதிகமான் நெடுமானஞ்சியின் அவைப் புலவரான ஒளவையாரும் இவர்கள் காலத்திலிருந்தார். அதிகமான் நெடுமானஞ்சியின் மகனான எழினி, தகடூர்ப் போர்க் களத்தில் வீரப்போர் செய்து இறந்தபோது அரிசில்கிழார் அவனுடைய வீரத்தைப் புகழ்ந்து பாடினார் (புறம். 230). தகடூர் யாத்திரையில் அரிசில்கிழாருடைய செய்யுள்களும் இருந்தன என்று கூறினோம். தொல்காப்பியம் பொருளதிகாரம் புறத் திணையியலின் உரையில், உரையாசிரியர் நச்சினார்க் கினியர், தகடூர் யாத்திரையிலிருந்து அரிசில்கிழாரின் செய்யுட் கள் சிலவற்றை மேற்கோள் காட்டுகிறார். புறத்திணையியல் ‘இயங்குபடையரவம்’ எனத் தொடங்கும் 8ஆம் சூத்திரத்தின் ‘பொருளின்று உய்த்த பேராண் பக்கம்’ என்பதன் உரையில் “மெய்ம்மலி மனத்தினம்மெதிர் நின்றோன்” என்னும் செய்யுளை மேற்கோள் காட்டி “இஃது அதிகமானால் சிறப்பெய்திய பெரும்பாக்கனை மதியாது நின்றானைக் கண்டு அரிசில்கிழார் கூறியது” என்று எழுதுகிறார். புறத்திணையில் ‘கொள்ளார் தேஎங் குறித்த கொற்றமும்’ என்று தொடங்கும் 12ஆம் சூத்திரத்தில் ‘அன்றி முரணிய புறத்தோன் அணங்கிய பக்கமும்’ என்பதன் உரையில் நச்சினார்க்கினியர் ‘கலை யெனப் பாய்ந்த மாவும்’ என்னுஞ் செய்யுளை மேற்கோள் காட்டி, “இது சேரமான் (பெருஞ் சேரலிரும்பொறை) பொன்முடியாரையும் அரிசில் கிழாரையும் நோக்கித் தன் படைபட்ட தன்மை கூறக் கேட்டோற்கு அவர் கூறியது” என்று விளக்கங் கூறியுள்ளார். தகடூர்ப் போரை வென்ற பெருஞ்சேரலிரும்பொறை மேல் அரிசில்கிழார் பத்துச் செய்யுட்களைப் பாடினார் (பதிற்றுப் பத்து, எட்டாம் பத்து). அச்செய்யுள்களில் அவ்வரசனுடைய வெற்றிகளையும் |