பண்டைத் தமிழக வரலாறு - கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு | 183 |
பௌத்த மத, ஜைன மதத் துறவிகள் ஊருக்கு அப்பால் மலைக் குகைகளில் இருந்து தவம் செய்வது அக்காலத்து வழக்கம். அவர்கள் படுப்பதற்காகக் கல்லிலேயே பாய் தலையணைபோல அமைத்துக் கொடுப்பது ஊரார் கடமையாக இருந்தது. அந்த முறையில் இந்தக் குகைகளிலே, கற்படுக்கைகள் அமைக்கப் பட்டிருக்கின்றன. இங்குள்ள பிராமி எழுத்துக்கள் இந்தப் படுக்கைகளை அமைத்துக் கொடுத்தவர் களின் பெயரைக் கூறுகின்றன. ஆறு நாட்டார் மலையில் உள்ள பிராமி எழுத்துக்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம். சாசன எழுத்து (எபிகிராபி) இலாகாவின் 1927- 28ஆம் ஆண்டின் 343ஆம் பதிவு எண்ணுள்ள எழுத்துக்கள் இவை (343 of 1927 - 28). இந்த எழுத்துக்கள் இரண்டு வரியாக எழுதப் பட்டுள்ளன. முதல் வரியில் பத்து எழுத்துக்களும், இரண்டாம் வரியில் ஒன்பது எழுத்துக்களும் இருக்கின்றன. இந்தக் கல்லில் புள்ளிகளும் புரைசல்களும் இருப்பதனால் சில எழுத்துகள் செம்மையாகத் தெரியவில்லை. ஆனாலும், கூர்ந்து பார்த்து அவற்றைப் படிக்க இயலும் (படம் காண்க). 
திரு டி.வி மகாலிங்கம் இவ்வெழுத்துக்களை இவ்வாறு படிக்கிறார்:5 ‘கருவூர் பொன் வாணிகள், நேர்த்தி அதிட்டானம்.’ இவ்வாறு படித்து, நேர்த்தி என்றால் நேர்ந்து கொள்ளுதல் (பிரார்த்தனை செய்துகொள்ளுதல்) என்று விளக்கங் கூறுகிறார். கருவூர் பொன் வாணிகள் நேர்ந்துகொண்டு அமைக்கப்பட்ட அதிஷ்டானம் என்று கருத்துத் தெரிவிக்கிறார். திரு. ஐரவாதம் மகாதேவன் இதைக் கீழ்க்கண்டவாறு படிக்கிறார்:6 கருவூர் பொன் வாணிகன், நத்தி அதிட்டானம் வாணிகன் நத்தி என்பதை வாணிகன் + அத்தி என்று பிரித்து, ‘கருவூர் பொன் வாணிகன் அத்தியினுடைய அதிட்டானம் (இடம்)’ என்று பொருள் கூறுகிறார். |