188 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 2 |
என்னும் பெயர் இருந்திருக்க வேண்டுமென்று இதனால் தெரிகிறது. பிட்டெந்தை என்னும் பெயரே இந்தச் சாசன எழுத்தில் பிடந்தை என்று எழுதப்பட்டிருக்கிறது என்பது தெரிகிறது. இதற்கு அடுத்துள்ள மூன்று எழுத்துக்கள் மகன் என்பது. இதை மகாதேவன் மகள் என்று படித்து அது மக்கள் என்னும் பொருளுடைய சொல் என்று கருதுகிறார். மகன் என்பதே சரியான வாசகம். கடைசியாக உள்ள ஏழு எழுத்துக்கள் கீரன் கொற்றன் என்று முடிகின்றன. இவற்றை மகாலிங்கமும் மகாதேவனும் சரியாகவே வாசித்திருக்கிறார்கள். ஆனால் மகாதேவன், கீரன், கொற்றன் என்று இரண்டு பெயரைக் குறிக்கின்றன இவை என்று கருதுகிறார். இது தவறு என்று தெரிகிறது. பிட்டந்தையாகிய பிட்டனுக்குக் கொற்றன் என்றும் பெயர் உண்டு என்பதைச் சங்கச் செய்யுள்களிலிருந்தும் அறிந்தோம். பிட்டங்கொற்றன் என்னும் பெயரை எடுத்துக் காட்டினோம். அதுபோலவே, அவன் மகனான கீரனும் கொற்றன் என்று இதில் கூறப்படுகிறான். ஆகவே, கீரன் கொற்றன் என்பது ஒரே ஆளைக் குறிக்கிறது. பிடந்தை மகன் கீரன் கொற்றன் நள்ளியூரில் இருந்தான் என்பதும் அவன் புகழூர் மலைக்குகையில் கற்படுக்கைகளை முனிவர்களுக்காக அமைத்துக் கொடுத்தான் என்பதும் இந்தக் கல்வெட்bத்துக்களினால் அறியப்படுகின்றன. நள்ளியூர் என்று எழுதப்படவேண்டிய சொல் நள்ளிவ்ஊர் என்று வகர ஒற்றுச் சேர்த்து எழுதப்பட்டிருக்கிறது. ஆகவே, இதை நள்ளியூர் என்று திருத்திப் படிக்க வேண்டும். புகழூரில் இன்னொரு சாசனம் மேலே சொன்ன சாசனத்தோடு தொடர்புடையதாகக் காணப்படுகிறது. இது, சாசன எழுத்து இலாகாவின் 1963-64 ஆம் ஆண்டின் 296ஆம் எண்ணுள்ளதாகப் பதிவு செய்யப் பட்டிருக்கிறது. இந்தக் கல்வெட்டெழுத்தை திரு. டி.வி. மகாலிங்கம் அவர்கள் தம்முடைய நூலில் ஆராயாமலும் குறிப்பிடாமலும் விட்டுவிட்டார். இதன் காரணம் தெரியவில்லை. ஆனால் திரு. ஐ. மகாதேவன் அவர்கள் இதைத் தம்முடைய கட்டுரையில் ஆராய்கிறார்.9 இது இரண்டு வரிகளில் எழுதப்பட்டிருக்கிறது. முதல் வரியில் பதினைந்து எழுத்துகளும், இரண்டாம் வரியில் பதினொரு எழுத்துக்களும் உள்ளன. (படம் காண்க). |