190 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 2 |
என்னும் பொருளுடைய குறுமகள் என்னுஞ்சொல் சங்கச் செய்யுள்களில் அதிகமாகக் காணப்படுகிறது. அவற்றில் சிலவற்றைக் காட்டுவோம். ‘நோவல் குறுமகள்’ (அகம். 25 :16), ‘ஒள்ளிழைக் குறு மகள்’ (நற். 253: 5), ‘மேதையங் குறுமகள்’ (அகம். 7 :6). ‘பொலந்தொடிக் குறுமகள்’ (அகம். 219:9), ‘வாணுதற் குறுமகள்’ (அகம். 230:5), ‘பெருந்தோட் குறுமகள்’ (நற். 221:8), ‘ஆயிழை குறுமகள்’ (அகம். 161: 11), ‘மாண்புடைக் குறுமகள்’(நற். 352:11), ‘மெல்லிய குறுமகள்’ (நற். 93:8), ‘வாழியோ குறுமகள்’ (நற். 75 :4), ‘மடமிகு குறுமகள்’(நற். 319:8), ‘எல்வளைக் குறுமகள்’ (நற். 167:10), ‘அணியிற் குறுமகள்’ (நற். 184:8) முதலியன. குறும் மகள் என்பதை மகாதேவன் அவர்கள் குறும்மக்கள் என்று படிக்கிறார். இச்சாசனத்தில் குறும்மகன் என்று இருப்பதாக ஐ. மகாதேவன் எழுதுகிறார். குறும்மகன் என்பது பிழை என்றும் அது குறுமகன் என்று இருக்க வேண்டும் என்றும் எடுத்துக்காட்டுகிறார். குறுமகன் என்பதற்கு இளையமகன் என்றும் பொருள் கூறுகிறார்.11 இது முற்றிலும் தவறு. குறுமகன் என்பதற்கு இளையமகன் என்பது பொருள் கிடையாது. அதற்குக் கீழ்மகன் என்பது பொருள். ஆனால், குறுமகள் என்றால் இளைய மகள், இளம்பெண் என்பது பொருள். இப்பொருளில் இச்சொல் சங்க இலக்கியங்களில் பயின்று வந்திருப்பதை மேலே எடுத்துக் காட்டினோம். குறு மகன் என்பதற்கு இளையமகன் என்பது பொருள் அன்று; கீழ்மகன், இழிந்தவன் என்பதே பொருள் உண்டு. உதாரணங் காட்டுவோம். குறுமகன் (சிலம்பு. 15: 95), குறுமகனால் கொலையுண்ண (சிலம்பு. 29. உரைப்பாட்டுமடை), கோவலன் தன்னைக் குறுமகன் கோளிழைப்ப (சிலம்பு. 29. காவற்பெண்டரற்று), உருகெழுமூதூர் ஊர்க் குறு மாக்கள் (சிலம்பு. 30:109). பழைய அரும்பதவுரை யாசிரியரும் அடியார்க்கு நல்லாரும் குறுமகன் என்பதற்குக் கீழ்மகன் என்று உரை எழுதி யிருப்பதைக் காண்க. இதன் பொருளை யறியாமல் ஐ. மகாதேவன், குறுமகள் என்பதன் ஆண்பாற் பெயர் குறுமகன் என்று கருதுகிறார். சில பெண்பாற் பெயர்களுக்கு நேரான ஆண்பாற் பெயர்கள் இல்லை என்பதும் அப்படி வழங்குகிற ஆண்பாற் சொற்களுக்குத் தாழ்ந்த இழிவான பொருள் உள்ளன என்றும் அறிஞர்கள் அறிவார்கள். உதாரணமாக, இல்லாள் - இல்லான் என்னுஞ் சொற்களை எடுத்துக் கொள்வோம். இல்லாள் என்றால் வீட்டரசி, மனைவி, இல்லற |