பக்கம் எண் :

20மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 2

ஒரு நாட்டின் வரலாறு எழுதுவதற்கு நல்ல சான்றுகளாக இருப்பவை ஆர்க்கியாலஜி (பழம்பொருள் அகழ்வாராய்ச்சி), எபிகிராபி (சாசன எழுத்துக்கள்), நூமிஸ்மாட்டிக்ஸ் (பழங்காசுகள்), இலக்கியச் சான்றுகள் முதலானவை. கொங்கு நாட்டுப் பழைய சரித்திரம் எழுதுவதற்கு இந்தச் சான்றுகளில், இலக்கியச் சான்றுகளைத் தவிர, ஏனைய சான்றுகள் மிகமிகக் குறைவாக உள்ளன.

அகழ்வராய்ச்சி (ஆர்க்கியாலஜி) கொங்கு நாட்டில் தொடங்க வில்லை என்றே கூறவேண்டும். தமிழ்நாட்டின் ஏனைய மண்டலங் களில் ஆர்க்கியாலஜி முறையாகவும் தொடர்ந்தும், முழுமையுமாகச் செயற்படாமலிருப்பது போலவே, கொங்கு மண்டலத்திலும் ஆர்க்கியாலஜி அதிகமாகச் செயற்படவில்லை. ஆகவே, ஆர்க்கியா லஜி சான்றுகள் நமக்குப் போதுமான அளவு கிடைக்கவில்லை.

எபிகிராபி (பழைய சாசன எழுத்துச் சான்று) ஓரளவு கிடைத்துள்ளன. அவை பிராமி எழுத்துகளில் எழுதப் பட்டிருக்கிற படியால் நம்முடைய கொங்கு நாட்டுப் பழைய சரித்திரத்துக்கு ஓரளவு உதவியாக இருக்கின்றன. பிராமி எழுத்துச் சாசனங்கள், கொங்கு நாட்டில் உள்ளவை, முழுமையும் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளன. கிடைத்திருக்கிற பிராமி எழுத்துச் சாசனங்களும் அக்காலத்து அரசரைப் பற்றிய செய்திகளைக் கூறவில்லையாகையால் இவையும் நமக்கு அதிகமாகப் பயன்படவில்லை. ஆனால், இந்தச் சாசன எழுத்துகள் அக்காலத்துச் (மத) சமயங்கள் சம்பந்தமாகவும் சமூக வரலாறு சம்பந்தமாகவும் நமக்குப் பயன்படுகின்றன. கொங்கு நாட்டில் கிடைத்துள்ள பெரும்பான்மையான பிற்காலத்து வட்டெழுத்துச் சாசனங்கள் நம்முடைய பழங்கால ஆராய்ச்சிக்குப் பயன்படவில்லை.

நூமிஸ்மாட்டிக்ஸ் என்னும் பழங்காசுச் சான்றுகள் கிடைத்திருக் கிற போதிலும், இவை கொங்கு நாட்டுக்கேயுரிய பழங்காசுகளாக இல்லாமல், உரோமாபுரி நாணயங்களாக இருக்கின்றன. எனவே, இந்தப் பழங்காசுகளிலிருந்து கொங்கு நாட்டின் பழைய சரித்திரத்தையறிய முடியவில்லை. ஆனால், இந்த ரோமாபுரிப் பழங்காசுகள் அக்காலத்துக் கொங்கு நாட்டின் வாணிக வரலாற்றை யறியப் பயன்படுகின்றன.